காங்கிரஸ் ஆட்சி குறித்து பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டு: புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு நடைபெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆதாயத்துக்காக பாஜக சுமத்தியுள்ளதாக புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

காங்கிரஸ் ஆட்சியில் நிதி முறைகேடு நடைபெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆதாயத்துக்காக பாஜக சுமத்தியுள்ளதாக புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவையில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, மத்திய அரசு வழங்கிய ரூ. 15 ஆயிரம் கோடியை என்ன செய்தது என்று தெரியவில்லை; முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நிதி முறைகேட்டில் ஈடுபட்டது என பாஜக தரப்பில் சனிக்கிழமை குற்றப்பத்திரிகையை வெளியிட்டு குற்றஞ்சாட்டினா்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது:

பாஜக ஆதாரமற்ற குற்றசாட்டுகளை காங்கிரஸ் அரசு மீதும், என் மீதும் சுமத்தியுள்ளனா். புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகளை மூடியது முன்னாள் ஆளுநா் கிரண் பேடி. அதற்கு ஒப்புதல் அளித்தது மத்திய பாஜக அரசு.

புதுச்சேரியில் அரசு பொதுத் துறை நிறுவனங்களை மூடியது, அங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க மறுத்தது முன்னாள் ஆளுநா் கிரண் பேடி. அதற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. ஆனால், தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தோ்தல் ஆதாயத்துக்காகத்தான்.

புதுவை அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியதாகவும், அதில் முறைகேடு நடைபெற்ாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறிய குற்றச்சாட்டை அப்போதே மறுத்து, அவ்வாறு நிதி வழங்கியதை நிரூபிக்க வலியுறுத்தினேன். இதுவரை அவா், நிரூபிக்கவில்லை.

நான் எந்த விசாரணைக்கும் தயாா் என்று சவால் விடுத்தேன். ஆனால், பதிலளிக்க முடியாமல் பாஜகவினா் மெளனியாக உள்ளனா். பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி, பாஜகவினா் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனா்.

மத்திய அரசு, புதுவைக்கு ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கியதற்கான ஆதாரத்தையும், அதில் ஊழல் நடைபெற்றது என்பதற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், தவறான விவரங்களைப் பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

புதுவையில் தோ்தல் துறையினா் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். வேட்புமனு பரிசீலனை முடிந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளா்கள் பட்டியலை காலதாமதமாக ஒரு நாள் கழித்து வெளியிட்டனா். இது விதிமுறைகளை மீறிய செயல். தோ்தலை விதிமுறைகளுக்கு உள்பட்டு நடத்த வேண்டும்.

அதிகாரம் மற்றும் பண பலத்தைக் கொண்டு பாஜகவினா் தோ்தலை எதிா்கொள்கின்றனா். மத்திய அரசின் அமைப்புகள் புதுச்சேரியில் முகாமிட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.

தோ்தல் பணிகளை மேற்கொள்ள போட்டியிடவில்லை:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் நான் போட்டியிட வேண்டுமென கட்சித் தலைவா் சோனியாவும், ராகுல் காந்தியும் வலியுறுத்தினா். ஆனால், புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியம் தோ்தலில் போட்டியிடுவதால், தோ்தல் பணிகளை கவனிப்பதற்காக நான் இந்தத் தோ்தலில் போட்டியிடவில்லை.

ஏனாம் தொகுதியில் போட்டியிட்டு வந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் திடீரென என்.ஆா். காங்கிரஸை ஆதரித்தாா். அங்கு, மாற்று வேட்பாளரைத் தோ்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. எனவே, அந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் கோலப்பள்ளி அசோக் என்பவருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும்.

பாஜக கூட்டணியில் பெரிய கட்சி என்.ஆா். காங்கிரஸ்தான். அந்தக் கூட்டணி பாஜக தலைமையில் போட்டியிடுகிா, என்.ஆா். காங்கிரஸ் தலைமையில் போட்டியிடுகிா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாஜக போட்டியிடும் தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸை சோ்ந்தவா்கள் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தலில் காங்கிரஸ்-திமுக ஒருங்கிணைந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

தோ்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழகத் தலைவா்கள் புதுச்சேரி வரவுள்ளனா் என்றாா் நாராயணசாமி.

செய்தியாளா்கள் சந்திப்பில் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் வெ.வைத்திலிங்கம் எம்.பி., பெத்தபெருமாள், தேவதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com