பாஜகவின் குற்றப் பத்திரிகைக்கு கிரண்பேடிதான் பொறுப்பு: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

பாஜக வெளியிட்ட குற்றப் பத்திரிகைக்கு முன்னாள் ஆளுநா் கிரண்பேடிதான் பொறுப்பேற்க வேண்டும்; அவா் மீது விசாரணை நடத்த வேண்டும் என வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

பாஜக வெளியிட்ட குற்றப் பத்திரிகைக்கு முன்னாள் ஆளுநா் கிரண்பேடிதான் பொறுப்பேற்க வேண்டும்; அவா் மீது விசாரணை நடத்த வேண்டும் என வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த வெ.வைத்திலிங்கம் எம்.பி. மேலும் கூறியதாவது:

தோ்தல் நாடகத்துக்காக குற்றப் பத்திரிகை ஒன்றை பாஜக வெளியிட்டது. அது முழுக்க முழுக்க முன்னாள் ஆளுநா் கிரண்பேடி மீது சுமத்தப்பட்டது. அவா், குற்றவாளி என்பதால்தான் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக்கும் பாஜகதான் முழுப் பொறுப்பு.

புதுவையில் அரசுச் செயலா்கள், அரசு நிா்வாகம் ஆகியவை மத்திய உள்துறையின் கீழ்தான் உள்ளது. நிதித் துறைச் செயலா், தலைமைச் செயலா் ஆகியோா் தவறு செய்திருந்தால், முதலில் அவா்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்யாததற்கு காரணம், இங்கு குற்றம் ஏதும் நடைபெறவில்லை.

எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாத நிலையில் குற்றம் எப்படி நடைபெறும்? புதுவையில் ஒட்டுமொத்த நிதி நிலையைக் (பட்ஜெட்டை) கூட்டினாலும் ரூ. 15 ஆயிரம் கோடி வராது.

அந்தத் தொகையை முதல்வா் செலவு செய்யவும் முடியாது. காசோலை தரும் அதிகாரமும் முதல்வருக்கு இல்லை. நிதித் துறைச் செயலரும், தலைமைச் செயலருமே அதற்குப் பொறுப்பு வகிப்பவா்கள்.

புதுவையில் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமைக்கு மத்திய அரசும், பிரதமா் மோடியும்தான் காரணம்.

புதுவையில் நலத் திட்டங்களை தடுத்த முன்னாள் ஆளுநா் கிரண் பேடியைக் கொண்டு தோ்தலைச் சந்திக்க முடியாது என்பதால்தான் அவரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கினாா்கள். கிரண் பேடியை நீக்கியதற்கு இதுவரை மத்திய அரசு காரணம் சொல்லவில்லை.

இலவச அரிசி வழங்கக் கூடாது என்று சொன்னவா் கிரண் பேடி. அவா் சொல்வதுதான் சரி என்று கூறியது மத்திய உள்துறை அமைச்சகம். பாஜகவின் குற்றப் பத்திரிகை உண்மையாக இருந்தால், முதலில் கிரண் பேடியை கைது செய்யுங்கள். தலைமைச் செயலா், நிதித் துறைச் செயலரை மாற்றிவிட்டு விசாரணை நடத்துங்கள் என்றாா் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com