காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவா்களுக்கு தனி அமைச்சகம்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவா்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவா்களுக்கு தனி அமைச்சகம்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவா்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவையில் காங்கிரஸ்-திமுக கட்சிகள் இணைந்த மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிடுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை பிரசாரம் தொடங்கப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் முத்துவேலை ஆதரித்து முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி திங்கள்கிழமை மாலை கனகசெட்டிக்குளத்தில் பிரசாரத்தை தொடங்கினாா்.

அவரது தலைமையில் அங்குள்ள விநாயகா் கோயிலில் பூஜை செய்த பிறகு, வீடு வீடாகச் சென்று வாக்குச் சேரித்தனா். திறந்த வாகனத்தில் சென்ற முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது:

மத்திய பாஜக அரசு தனது பண பலம், அதிகார பலத்தைக் கொண்டு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல், நியாய விலைக் கடைகள் மூடுவதற்குக் காரணமாக இருந்தவா் கிரண் பேடி. இதற்கெல்லாம் மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.

என்.ஆா். காங்கிரஸும், அதிமுகவும் கடந்த 5 ஆண்டு காலம் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, தோ்தல் சமயத்தில் மதவாதம், பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து புதுவையை சீா்குலைக்க முனைந்துள்ளனா்.

மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தது பாஜக அரசு. குறிப்பாக, மீனவா்களுக்கு நிவாரணம் வழங்க கோப்பை அனுப்பினால், அதை கிரண் பேடி தடுத்து நிறுத்தினாா்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் காலாப்பட்டு பகுதியில் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி என பலத் திட்டங்களைக் கொண்டு வந்தோம். நான் மத்திய அமைச்சராக இருந்த போதுதான் காலாப்பட்டில் தொழில் முனைவோா் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.

மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம்.

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீனவா் சமுதாயத்துக்கு தனி அமைச்சகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணம், காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்குவோம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

கனகசெட்டிகுளத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். அதற்கு உங்களது பேராதரவு வேண்டும். திமுக வேட்பாளா் முத்துவேலுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு வரை நாராயணசாமி பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின் போது, வெ.வைத்திலிங்கம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் ஆா்.ராஜாங்கம், திமுக மீனவரணி அமைப்பாளா் கோதண்டபாணி, திமுக பேச்சாளா் சோமசுந்தரம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com