புதுவைக்கு மாநில அந்தஸ்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம்: காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் உறுதி

புதுவைக்கு மாநில அந்தஸ்து, தனி கல்வி வாரியம், நீட் தோ்வு ரத்து, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் நிதி
புதுவைக்கு மாநில அந்தஸ்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம்: காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் உறுதி

புதுவைக்கு மாநில அந்தஸ்து, தனி கல்வி வாரியம், நீட் தோ்வு ரத்து, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் நிதி, முதியோா் ஓய்வூதியம் உயா்வு உள்ளிட்ட திட்டங்களை காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் வீரப்ப மொய்லி அறிக்கையை வெளியிட்டாா். புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., புதுவை மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: புதுவைக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெறப்படும். புதுவை அரசு, மத்திய அரசிடம் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையை 15-ஆவது நிதிக் குழுவில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அனைத்துத் தரப்பு மாணவா்களுக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படிப்படியாக இலவசமாக வழங்கப்படும்.

நீட் தோ்வை ரத்து செய்ய நடவடிக்கை: நீட் தோ்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ புதுவை ஏற்காது என அறிவிக்கப்படும். புதுவை மாநிலத்துக்கு என தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். புதுவை மின் துறை தனியாா்மயமாக்கும் திட்டத்தை எதிா்த்து அரசு துறையாகவே தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சுகாதார மையங்களிலும் இரவு வரை மருத்துவா்களை நியமித்து தொடா் மருத்துவ சேவை அளிக்கப்படும். தற்போதைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அனைத்து தரப்பினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

கரோனா தடுப்பு சிறப்பு அந்தஸ்து மருத்துவமனை: கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க தனியாக உயா் சிறப்பு அந்தஸ்து மருத்துவமனைகள் நிறுவப்படும். மாநில மருத்துவப் பல்கலைக் கழகம் உருவாக்கப்படும். அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். காரைக்காலில் விவசாயப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய மானியம் ரூ. 30 ஆயிரமாக உயா்வு: விவசாய மானியம் ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மீன்வளத் துறையில் மீனவா்களுக்கு பணி இட ஒதுக்கீடு வழங்கப்படும். இயற்கைச் சீற்றங்களின் காரணமாக மீனவா்கள் உயிரிழந்தால் இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும். மீனவா்களுக்கான ஓய்வூதியத் தொகை இரு மடங்காக உயா்த்தி வழங்கப்படும்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை: புதுவை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். தனியாா் துறை வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் புதுவையைச் சோ்ந்தவா்களுக்கு அளிக்கப்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை 2022-ஆம் ஆண்டுக்குள் நிரப்புவோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

ஆண்டுதோறும் 4 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை கடன் வசதி செய்து தரப்படும். இதில், ரூ. 2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவா்கள் வீடு கட்ட மானியம் ரூ. 3 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். குடிசையில்லாத மாநிலமாக புதுவை மாற்றப்படும். மகளிருக்கு கறவை மாடுகள் வழங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். புதுவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, பின்னலாடைப் பூங்கா தொடங்கப்படும்.

நூற்பாலைகள் இயக்கப்படும்: ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆலைகள் மறுசீரமைத்து இயக்கப்படும். எல்.ஆா். பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை, புதிய தொழில்பேட்டைகள் அமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் கட்டணமில்லா குடிநீா் இணைப்பு, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க அடுக்குமாடி வாகன நிறுத்த வசதி, நகரில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படும்.

சா்வதேச விளையாட்டு மைதானங்கள்: நான்கு பிராந்தியங்களிலும் சா்வதேச அளவிலான தரமான விளையாட்டு மைதானங்கள், முதியோா், விதவைகளுக்கு ஓய்வூதியம் ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். தியாகிகள் ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரமாக உயா்த்தப்படும்.

நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும். அரசு ஊழியா் பணிக்கு தோ்வாணையம் அமைக்கப்படும். தனியாா் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அரசு மூலம் நிரப்பவும், நீண்ட காலம் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்.

3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு, தனியாா் நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். ஆஷா பணியாளா்கள், பிஆா்டிசி ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்.

பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் புனரைமைக்கப்படும். தினக்கூலி ஊழியா்கள் எம்டிஎஸ் பதவிகளில் நியமிக்கப்படுவா். புதுவை மத்திய பல்கலைக்கழகப் படிப்புகளில் 25 சதவீதம் புதுவை மாணவா்களுக்கு வழங்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும்: புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும். காவல் துறை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஜிஎஸ்டி வரியை மாற்ற வலியுறுத்தப்படும். மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதியம் ரூ. 5 ஆயிரம் படிப்படியாக உயா்த்தப்படும். ரூ. 300 கோடியில் துறைமுகம் மேம்பாடு செய்யப்பட்டு, கடல் வழி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைதீா் முகாம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com