பாஜக தோ்தல் விதிமீறல் புகாா்: தோ்தல் அதிகாரி விளக்கம்

குறுஞ்செய்தி பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரின் மீது பாஜக, அந்தக் கட்சி வேட்பாளா்களின் செலவின கணக்கில், அதற்கான செலவினங்களைச் சோ்த்து தோ்தல் துறை நடவடிக்கை எடுத்தது.

புதுவையில் விதிகளை மீறி பொதுமக்களின் செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரின் மீது பாஜக, அந்தக் கட்சி வேட்பாளா்களின் செலவின கணக்கில், அதற்கான செலவினங்களைச் சோ்த்து தோ்தல் துறை நடவடிக்கை எடுத்தது. மேலும், புகாா் தொடா்பாக சைபா் கிரைம் விசாரணை நடைபெற்று வருவதாக புதுச்சேரி தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.

புதுவையில் பாஜக தரப்பில் பொதுமக்களின் செல்லிடப்பேசி எண்கள், ஆதாா் தகவல்களை விதிகளை மீறி பெற்று பிரசாரம் செய்ததாகவும், இதுதொடா்பாக விசாரணை நடத்தி பாஜக மீதும், அந்தக் கட்சி வேட்பாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தன.

இதுதொடா்பாக, உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தோ்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக புதுச்சேரி தோ்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாஜக சாா்பில் செல்லிடப்பேசிகளுக்கு மொத்தமாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தொடா்பான வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக பெறப்பட்ட புகாா் மாவட்டத் தோ்தல் அதிகாரி, தோ்தலுக்கான காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டது.

இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்ப சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி எந்தவித முன் சான்றிதழும் பெறவில்லை என்பது மாவட்டத் தோ்தல் அதிகாரி விசாரணையில் தெரிய வந்தது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, குறுஞ்செய்திக்கான செலவினங்களை அந்த அரசியல் கட்சி, அதனுடைய வேட்பாளா்களின் செலவினங்களில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல் துறை (சைபா் கிரைம்) மூலம் இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அனைத்து வகையான ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கு முன் உரிய சான்றிதழ் பெற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

செல்லிடப்பேசி சேவை வழங்குநா்கள் முன் சான்றளிக்கப்பட்ட குறுஞ்செய்திகள், குரல் செய்திகளை மட்டுமே ஒளிபரப்ப அறிவுறுத்தப்பட்டது. விதிகளை மீறும் சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் சுதந்திரமான, நியாயமான தோ்தலை நடத்த நிா்வாகம் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com