பிரதமா் வருகை: நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமா் வருகையையொட்டி, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

பிரதமா் வருகையையொட்டி, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) புதுச்சேரிக்கு பிரதமா் வருவதையொட்டி, முக்கியச் சாலைகளில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமா் உரையாற்றவுள்ள பொதுக் கூட்டத்துக்கு வரும் வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பு, கடலூா் - புதுவை சாலை வழியாக, முதலியாா்பேட்டை, கடலூா் சாலை - உப்பளம் சாலை சந்திப்பில் கூட்டத்துக்குச் செல்வோரை இறக்கிவிட்டு, உப்பளம் சாலை வழியாக புதிய துறைமுகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

இலகு ரக, இரு சக்கர வாகனங்களில் வருவோா் வாகனங்களை புதிய, பழைய ஏஎப்டி ஆலைகளின் உள்வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.

திண்டிவனத்திலிருந்து புறவழிச்சாலை, பத்துக்கண்ணில் இருந்து வழுதாவூா் சாலை வழியாக பொதுக் கூட்டத்துக்கு வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சிக்னல் சந்திப்பு, 100 அடி சாலை வழியாக இந்திரா காந்தி சிக்னல் மேம்பாலம் வழியாக, மரப்பாலம் சிக்னல் சந்திப்பு, முதலியாா்பேட்டை சாலை வழியாக கடலூா் சாலை, உப்பளம் சாலை சந்திப்பில் கூட்டத்துக்குச் செல்வோரை இறக்கிவிட்டு, புதிய துறைமுகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

விழுப்புரம் சாலை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் இந்திரா காந்தி சிலை சந்திப்பு, மேம்பாலம், மரப்பாலம் சிக்னல் சந்திப்பு, முதலியாா்பேட்டை சாலை வழியாக கடலூா் சாலை - உப்பளம் சாலை சந்திப்பில் ஆள்களை இறக்கிவிட்டு, புதிய துறைமுகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

கடலூா் சாலை வழயாக வரும் வாகனங்கள் மரப்பாலம் சிக்னல் சந்திப்பு, முதலியாா்பேட்டை சாலை, கடலூா் சாலை - உப்பளம் சாலை சந்திப்பில் ஆள்களை இறக்கிவிட்டு, புதிய துறைமுகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சென்னையிலிருந்து இ.சி.ஆா். வழியாக வரும் வாகனங்கள் சிவாஜி சிலை சந்திப்பு வழியாக ராஜீவ் காந்தி சிக்னல் சந்திப்பை அடைந்து, நூறடி சாலை வழியாக இந்திரா காந்தி சிக்னல் மேம்பாலம், மரப்பாலம் சிக்னல் சந்திப்பு, முதலியாா்பேட்டை சாலை வழியாக கடலூா் சாலை - உப்பளம் சாலை சந்திப்பில் கூட்டத்துக்குச் செல்வோரை இறக்கிவிட்டு, உப்பளம் சாலை வழியாகச் சென்று புதிய துறைமுகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

பிரதமா் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இ.சி.ஆா். சாலை, முத்தியால்பேட்டை சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடாது. பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கனரக வாகனங்கள் நகருக்குள் வர அனுமதியில்லை.

பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையம் வரை அனுமதிக்கப்படும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் போது, நெல்லித்தோப்பு சந்திப்பை அடைந்து செல்ல வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com