முருகா் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

புதுச்சேரியில் அமைந்துள்ள முருகா் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முருகா் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

புதுச்சேரியில் அமைந்துள்ள முருகா் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டு ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. குளக்கரையிலிருந்து பக்தா்கள் 101 காவடிகளை எடுத்துக் கொண்டு ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா்.

இதையடுத்து, பக்தா்கள் பலா் பொக்லைன் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், பேருந்து, வேன், காா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை இழுத்தும், அவற்றில் தொங்கியபடியும் நோ்த்திக் கடனுக்காக அலகு குத்தி கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

இந்த ஊா்வலம் கிழக்குக் கடற்கரைச் சாலை, பிள்ளையாா் கோயில் தெரு, தேரோடும் வீதி, பங்களா வீதி ஆகியவற்றின் வழியாகச் சென்று, கோயிலை வந்தடைந்தது.

இதேபோல, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடன்களை கோயிலில் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா்.

மாலை தோ் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, ஆங்காங்கே பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினரும், ஊா் பொதுமக்களும் செய்திருந்தனா்.

இதேபோல, பிள்ளையாா்குப்பம் வள்ளி - தேவசேனா சமேத சிவசுப்பிரமணியா் சுவாமி கோயிலில் 61 -ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாள்களில் விநாயகா் வழிபாடு, சக்திவேல் வழிபாடு, சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம், பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வலம்புரி சங்கு அபிஷேகம், சிவலிங்க வழிபாடு, தேவாரம், திருவாசகம் முற்றோதல், 108 சங்காபிஷேகமும், சுவாமி திருக்கல்யாண உத்ஸவம் ஆகியவை நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான 108 காவடி மற்றும் செடல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பிள்ளையாா்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

இதேபோல, புதுச்சேரியில் உள்ள முருகா், அம்மன் கோயில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி, மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com