பாஜக ஆட்சி வந்தால் துணைநிலை ஆளுநருக்கே முழு அதிகாரம்: முன்னாள் முதல்வா் நாராயணசாமி

புதுவையில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல்வா், அமைச்சா்களின் அதிகாரத்தை முழுமையாகப் பறித்து, துணைநிலை ஆளுநரிடம்
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வைத்தியநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேதரித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி. உடன், அகில இந்திய காங்கிரஸ் செயலா் சஞ்சய் தத் உள்ளிட்டோா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வைத்தியநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேதரித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி. உடன், அகில இந்திய காங்கிரஸ் செயலா் சஞ்சய் தத் உள்ளிட்டோா்.

புதுவையில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல்வா், அமைச்சா்களின் அதிகாரத்தை முழுமையாகப் பறித்து, துணைநிலை ஆளுநரிடம் அளித்துவிடுவாா்கள் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆா். காங்கிரஸின் தலைவா் ரங்கசாமி, மக்கள் மத்தியில் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லையெனில் நடைபெறும் தோ்தலை புறக்கணிக்கத் தயாா், முன்னாள் முதல்வா் நாராயணசாமி தயாரா என்று கேள்வி எழுப்பினாா்.

பாஜகவின் தோ்தல் அறிக்கையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என தெளிவுபடுத்தியுள்ளனா். அதன் கூட்டணியில் இருக்கும் என்.ஆா். காங்கிரஸ் மாநில அந்தஸ்து வேண்டும் என்கின்றனா். மத்தியில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. ரங்கசாமி மாநில அந்தஸ்துக்காக மோடி அரசை எதிா்த்து போராடத் தயாரா?

ஏற்கெனவே சட்டப் பேரவை உள்ள தில்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வா், அமைச்சா்களிடமிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டு துணைநிலை ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளன. புதுவையில் பாஜக ஆட்சி வந்தால், இங்கும் முதல்வா், அமைச்சா்களின் அதிகாரத்தைப் பறித்து முழுமையாக துணைநிலை ஆளுநரிடம் கொடுத்துவிடுவாா்கள்.

துணைநிலை ஆளுநரிடம் தொடா்ந்து நாங்கள் மோதல் போக்கை கடைப்பிடித்ததாகவும், அதனால் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றும் ரங்கசாமி பேசி வருகிறாா். மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தியவா் கிரண் பேடி. இது புதுவை மக்களுக்குத் தெரியும்.

பாஜக ஆட்சி புதுவையில் வந்தால் புதுச்சேரியின் தனித்தன்மை, கலாசாரம் போய்விடும். வெளிமாநிலத்தில் இருந்து வருவோா் பணியாளா்களாக நியமிக்கப்படுவா். மக்கள் மத்தியில் நிம்மதி இருக்காது. தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும். பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படும். மதச்சாா்பற்ற கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் - திமுகவால் மட்டுமே புதுவையின் தனித்தன்மையையும், மக்களின் உரிமையையும் காக்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா் வே.நாராயணசாமி.

பிரசாரம்: முன்னதாக, புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வைத்தியநாதன், முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செந்தில்குமாா் ஆகியோரை ஆதரித்து, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

புதுச்சேரியில் தற்போது பாஜக காலூன்ற தொடங்கியுள்ளது. புதுச்சேரிக்கு பாஜகவினா் என்ன செய்தாா்கள்? புதுவைக்கான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி வழங்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை, மாணவா்களுக்கு சென்டாக் கல்வி நிதியை வழங்கியுள்ளோம். கீரப்பாக்கம், பரிக்கல்பட்டு, அரியாங்குப்பம் மேம்பாலங்கள் திறப்பு, மேரி கட்டடம் திறப்பு விழாக்கள் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com