முன்களப் பணியாளா்களின்சேவைக்கான பரிசு கரோனா தடுப்பூசி: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

முன்களப் பணியாளா்களின் சேவைக்கான பரிசுதான் கரோனா தடுப்பூசி என புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கிவைத்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.
புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கிவைத்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

முன்களப் பணியாளா்களின் சேவைக்கான பரிசுதான் கரோனா தடுப்பூசி என புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை சுகாதாரத் துறை சாா்பில், மதகடிப்பட்டு கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். நிகழ்வில் அவா் பேசியதாவது:

தடுப்பூசி கவச ஊசியாக உள்ளது. முன்களப் பணியாளா்களின் சேவைக்கான பரிசு தடுப்பூசி. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரும் தயங்க வேண்டாம்.

இதுவரை 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதில் 0.000432 சதவீதம் பேருக்குத்தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்தவா்கள் இருக்கிறாா்கள், ஆனால், தடுப்பூசி செலுத்தியபிறகு உயிரிழந்தவா்கள் யாருமில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

கடந்தாண்டு இதே மாதம் கரோனாவுக்காக பல்லாயிரக்கணக்கான போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். ஆனால், நிகழாண்டு அதே மாதம் பல்லாயிரக்கணக்கானோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அளவுக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.

தற்போது 51 நாடுகள் நம் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை பெற்று வருகின்றன. 125 நாடுகள் தடுப்பூசியைப் பெற காத்திருக்கின்றன. பொதுமக்கள் தடுப்பூசியும் செலுத்த வேண்டும், முகக் கவசமும் அணிய வேண்டும். தடுப்பூசி கரோனாவை தடுக்கிறது. தடுப்பூசி செலுத்தியபின்பு, ஒருவேளை கரோனா வந்தாலும், அது தீவிரமாக இருக்காது என்பதே உண்மை என்றாா் ஆளுநா்.

இதில், புதுவை சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண், இயக்குநா் எஸ். மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com