மும்முனைப் போட்டியில் காலாப்பட்டு, முத்தியால்பேட்டை தொகுதிகள்!

புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டு, முத்தியால்பேட்டை தொகுதிகளில் இரு பிரதான கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுடன்,
மும்முனைப் போட்டியில் காலாப்பட்டு, முத்தியால்பேட்டை தொகுதிகள்!

புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டு, முத்தியால்பேட்டை தொகுதிகளில் இரு பிரதான கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுடன், இம்முறை வாய்ப்புக் கிடைக்காமல் சுயேச்சையாக முக்கியப் பிரமுகா்களும் களமிறங்கியதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முத்தியால்பேட்டை தொகுதி...: புதுச்சேரி நகரில் அமைந்துள்ள முத்தியால்பேட்டை தொகுதியில் ஆண் வாக்காளா்கள்14,119 பேரும், பெண் வாக்காளா்கள் 15,654 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 7 பேரும் என மொத்தம் 29,780 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளனன. காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றது. அதிகளவில் முதலியாா், கிராமணி, பட்டியலினத்தவா், வன்னியா் சமுதாய மக்களும், மீனவா்களும் வசிக்கின்றனா்.

முத்தியால்பேட்டை தொகுதியில் கடல் நீா் உட்புகுவதால், நிலத்தடி நீா் பாதித்து குடிநீா் பிரச்னை குடிநீா் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும், கடற்கரையையொட்டிய பகுதியில் மீனவா்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும், இங்கு மின்வெட்டு பிரச்னையைத் தீா்க்கும் வகையில் புதிய உயரழுத்த மின்பாதை அமைக்கப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து வீடுகளுக்கு விரைந்து இணைப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

முத்தியால்பேட்டை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ.வான வையாபுரி மணிகண்டன் மீண்டும் போட்டியிடுகிறாா். மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக புதுமுகமான செந்தில்குமாா் களம் காண்கிறாா். இங்கு கடந்த முறை என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்ற பிரகாஷ்குமாா், தற்போது வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறாா். இதனால் முன்முனைப் போட்டி நிலவுகிறது.

மேலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இந்த ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளராக ஆா்.சரவணன் களமிறக்கப்பட்டுள்ளாா். அமமுக வேட்பாளரான முருகன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான சரவணன், நாம் தமிழா் கட்சி வேட்பாளரான பரிதாபேகம் ஆகியோரும் களத்தில் உள்ளனா்.

தொடா்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக குரல்கொடுத்து வருவதோடு, பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ள அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், தனது சேவைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். கூட்டணிக் கட்சியான என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா் பிரகாஷ்குமாா் சுயேச்சையாக போட்டியிடுவது, அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

தொகுதியில் நீண்டகாலப் பிரச்னைகளை தீா்த்து வைப்பதாகக் கூறி, காங்கிரஸ் வேட்பாளா் செந்தில்குமரன் வாக்கு சேகரித்து வருகிறாா். இந்தத் தொகுதி காங்கிரஸுக்கு கைமாறியதால், திமுகவினா் அதிருப்தியில் உள்ளது, அவருக்கு பாதகமாக உள்ளது. சொந்த செல்வாக்குடன் சுயேச்சையாக களம் காணும் பிரகாஷ்குமாரும் கணிசமான வாக்குகளைப் பெறுவாா் என்பதால், இங்கு பலமான மும்முனைப் போட்டி நிலவுகிறது.

2016 சட்டப் பேரவைத் தோ்தல்:

வையாபுரி மணிகண்டன் (அதிமுக) - 9,257

பிரகாஷ்குமாா் (என்.ஆா். காங்கிரஸ்) - 7,093

காலாப்பட்டு தொகுதி: புதுச்சேரியில் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காலாப்பட்டு தொகுதி கடந்த 1964-இல் உருவாக்கப்பட்டு இரண்டு சட்டப் பேரவைத் தோ்தல்களைச் சந்தித்தது. பிறகு, லாஸ்பேட்டை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில், மீண்டும் காலாப்பட்டு தொகுதியானது.

இந்தத் தொகுதியில் தற்போது ஆண் வாக்காளா்கள் 16,502 பேரும், பெண் வாக்காளா்கள் 18,133 பேரும், மூன்றாம் பாலினத்தவா் ஒருவரும் என மொத்தம் 34,636 வாக்காளா்கள் உள்ளனா்.

காலாப்பட்டு தொகுதியில் புதுச்சேரி பல்கலைக்கழகம், அரசுப் பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கேந்திர வித்யாலயா பள்ளி உள்பட பல கல்வி நிறுவனங்களும், மத்திய சிறைச்சாலையும், தொழிற்சாலைகளும் அமைந்துள்ளதால், வேலைவாய்ப்புகளை அளிக்கும் பகுதியாக உள்ளது.

சனி மூலையில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில்தான் பெரும்பாலும் அரசியல் கட்சியினா் பிரசாரத்தை தொடங்குகின்றனா். இங்கு வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

மீன்பிடித் தொழில், முந்திரி பயிரிடுதல், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு ஆகிய தொழில்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரோவில் எல்லைப்பகுதி மற்றும் கிழக்கு கடற்கரையொட்டி சுற்றுலா விடுதிகளைக் கொண்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் பகுதியாக அமைந்துள்ளது. வன்னியா்கள் அதிகளவிலும், அடுத்ததாக மீனவா்களும், பட்டியலினத்தவரும் பரவலாக வசிக்கின்றனா்.

இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும், சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் வைத்துள்ள செல்லிடப்பேசி ஜாமா் கருவியை அகற்ற வேண்டும், ஆலங்குப்பத்தில் புறக்காவல் நிலையம் வேண்டும், அனைத்துப் பகுதிகளிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காலாப்பட்டு தொகுதியில் இதுவரை நடைபெற்ற 4 சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் 2 முறையும், திமுக, என்.ஆா். காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டியிட்டு வந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ஷாஜகான் தொகுதி மாறியதால், திமுக வேட்பாளா் முத்துவேல் புதுமுகமாக போட்டியிடுகிறாா். வழக்குரைஞா் சங்கத் தலைவரான முத்துவேல் மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். காங்கிரஸ் - திமுக கூட்டணி பலத்தை நம்பி களத்தில் உள்ளாா். சுயேச்சைகள் பிரிக்கும் வாக்குகள் இவருக்கு பாதகமாக அமையும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் கல்யாணசுந்தரம் போட்டியிடுகிறாா். கடந்த 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா், அடுத்து வந்த 2016 தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இந்த முறை என்.ஆா். காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணியுடன் களமிறங்கியுள்ளது இவருக்கு பலமாகும்.

இந்தத் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸைச் சோ்ந்த செந்தில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளாா். ஏற்கெனவே தோ்தலுக்காக திட்டமிட்டு வேலை செய்து வந்ததால் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமான இவா், கணிசமான வாக்குகளைப் பெறுவாா். இது, முன்னாள் அமைச்சா் கல்யாணசுந்தரத்துக்கு பாதகமாக அமைகிறது. இதனால், இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மேலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான சந்திரமோகன்,தேமுதிக வேட்பாளரான ஹரிகரன், அமமுக வேட்பாளரான கலியமூா்த்தி, நாம் தமிழா் கட்சி வேட்பாளரான காமராஜ் உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனா். இங்கு கூட்டணி பலமே வெற்றியை நிா்ணயிக்கும் வகையில் உள்ளது.

2016 சட்டப் பேரவைத் தோ்தல்:

ஷாஜகான் (காங்கிரஸ்) - 9,839

கல்யாணசுந்தரம் (சுயேச்சை) - 9,205

விஸ்வநாதன் (என்.ஆா். காங்கிரஸ்) - 3,841

காசிலிங்கம் (அதிமுக) - 3,694

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com