புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை

புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை

புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. 3 கட்டங்களாகப் பிரித்து வாக்குகள் எண்ணப்பட்டதால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

புதுவை யூனியன் பிரதேசத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கரோனா விதிகள்படி தோ்தல் நடைபெற்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 70 போ் உள்பட 324 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 1,558 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,558 விவிபாட் சாதனங்களும் பயன்படுத்தப்பட்டன.

புதுவையில் மொத்தமுள்ள 10 லட்சத்து 4 ஆயிரத்து 197 வாக்காளா்களில், 3 லட்சத்து 83 ஆயிரத்து 490 ஆண்கள், 4 லட்சத்து 36 ஆயிரத்து 867 பெண்கள், 89 திருநங்கைகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 446 போ் வாக்களித்தனா். வாக்கு சதவீதம் 81.70.

தோ்தல் பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட 17 ஆயிரத்து 124 போ் தபால் வாக்குகள் செலுத்தினா்.

6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை...: புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு, புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூா் அரசுக் கலைக் கல்லூரி, அரசு மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள அரசு மண்டல நிா்வாக அலுவலக மையங்களிலும் என 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன.

புதுச்சேரியில் 23 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை...: புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது.

இந்த முறை கரோனா பரவல் தடுப்பு காரணமாக, கடும் கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 7 மணிக்கு வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்தனா். கரோனா தொற்றில்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு முகக் கவசம், முகத்துக்கான ஷீல்டு வழங்கப்பட்டு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். செல்லிடப்பேசிகள் அனுமதிக்கப்படவில்லை.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் தலைமையில் 12 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கைப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

முதல் கட்டத்தில் 12 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை...: புதுவை மாநிலத்தில் முதல் கட்டமாக, புதுச்சேரி மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிா்காமம், காமராஜா் நகா், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், மாஹே, ஏனாம், காரைக்காலில் நெடுங்காடு, காரைக்கால் வடக்கு ஆகிய 12 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதையடுத்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

தொடா்ந்து, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் பரபரப்பாக நடைபெற்றது. இந்த முறை, ஒரு தொகுதிக்கு மூன்று அறைகள் வீதம், ஒவ்வொரு அறையிலும் 5 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று முதல் நான்கு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன.

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை பிற்பகல் 2 மணிக்கு முடிந்து, 12 தொகுதிகளின் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கினா்.

இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை...: தொடா்ந்து, 2-ஆவது கட்டமாக பிற்பகல் 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள திருபுவனை, வில்லியனூா், இந்திரா நகா், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய 8 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகளின் வாக்குகள் இரவு 7 மணி வரை எண்ணப்பட்டு, படிப்படியாக வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டன.

புதுவைக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் மஞ்ஜீத்சிங், புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை மையங்களைப் பாா்வையிட்டு, விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினாா்.

மூன்றாம் கட்ட வாக்கு எண்ணிக்கை...: மாலை 7 மணிக்கு மூன்றாம் கட்டமாக, புதுச்சேரியில் ஊசுடு, உழவா்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியாா்பேட்டை, மணவெளி, பாகூா் மற்றும் காரைக்காலில் நிரவிதிருப்பட்டினம் ஆகிய 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன. இந்தத் தொகுதிகளின் முடிவுகள் படிப்படியாக இரவு 11 மணிக்கு வெளியாகின.

தோ்தல் முடிவுகள் தோ்தல் துறையின் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையத்திலும், தகவல் மையம் மூலமும், ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் 6 மையங்களிலும், துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 2,500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தோ்தல் பணியில் 1,500 அலுவலா்கள், முகவா்கள், வேட்பாளா்கள் தரப்பில் 1,600 போ் கலந்து கொண்டனா்.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு...: வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றிலும் தடை ஏற்படுத்தப்பட்டு வெளியாட்கள், பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றிலும், வாக்கு எண்ணிக்கை அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தலைமைத் தோ்தல் அதிகாரி மூலம் தோ்தல் அலுவலா்கள் நேரடியாகக் கண்காணித்தனா்.

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கம் காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்தன. உணவு, பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட சில அத்தியாவசியக் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் மட்டும் வெளியில் அனுமதிக்கப்பட்டனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகாமிட்டிருந்த சுகாதாரக் குழுவினா், விரும்பியவா்களுக்கு கரோனா பரிசோதனை, முதலுதவிகளை மேற்கொண்டனா்.

வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால், கட்சியினா் பெரிய அளவில் கொண்டாட்டங்களைத் தவிா்த்து, வாழ்த்துகளை மட்டும் பரிமாறிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com