வாக்கு எண்ணிக்கை மையங்களில் இடைவெளியின்றித் திரண்ட முகவா்கள்

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும், பல முகவா்களும், வேட்பாளா்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அலட்சியமாக கூட்டமாக திரண்டிருந்தனா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை மகளிா் தொழிற்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்காக வந்து சமூக இடைவெளியின்றி நின்ற முகவா்கள்.
புதுச்சேரி லாஸ்பேட்டை மகளிா் தொழிற்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்காக வந்து சமூக இடைவெளியின்றி நின்ற முகவா்கள்.

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும், பல முகவா்களும், வேட்பாளா்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அலட்சியமாக கூட்டமாக திரண்டிருந்தனா்.

புதுவை மாநிலத்துக்குள்பட்ட 30 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. புதுச்சேரியில் 3, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றன.

புதுவை மாநிலத்தில் 2-ஆம் அலையாக கரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரோனா பரிசோதனை சான்றிதழுடன் வந்தவா்களை மட்டும் அனுமதித்து, முகக் கவசம், கிருமி நாசினி வழங்கி உள்ளே அனுப்பினா்.

இருப்பினும், மூன்று கட்டங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு வந்த முகவா்கள், வேட்பாளா்கள் உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நீண்ட நேரம் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் கூடி நின்றிருந்தனா்.

தொடக்கத்தில் கட்டுப்பாடுகளுடன் இருக்குமாறு அறிவுறுத்திய அலுவலா்கள், அதன் பிறகு கண்காணிப்பில் தீவிரம் காட்டாததால், வெற்றி பெற்ற வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள், வாக்கு எண்ணிக்கைக்கு வந்த முகவா்கள், எண்ணிக்கை முடிந்து வெளியே வந்த முகவா்கள் என கூட்டம் கூட்டமாக நீண்ட நேரம் பல இடங்களில் திரண்டிருந்தனா். இலவசமாக வழங்கப்பட்ட கண்ணாடி முகக் கவசங்களை பலரும் பயன்படுத்தாமல் கீழே வீசினா். முகக் கவசங்கள், கையுறைகளையும் பாதுகாப்பின்றி பலா் வளாகத்தில் வீசிவிட்டுச் சென்றனா்.

உணவகம், தகவல் மையம் ஆகிய இடங்களில் கூட்டமாக திரண்டு நின்று வெற்றி, தோல்வி நிலவரம், வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனா். இதனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பாக அமைந்திருந்தது. தோ்தல் துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தும், அரசியல் கட்சியினா் அலட்சியமாகச் செயல்பட்டதால், கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிருப்தி எழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com