புதுவையில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி 

புதுவையில் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநரைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
புதுவையில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி 

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநரைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
புதுவை யூனியன் பிரதேசத்துக்கான 15-ஆவது சட்டப் பேரவைத் தேர்தல் ஏப். 6-இல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 2-இல் வெளியாகின. இதில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை (16 தொகுதிகள்) இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. மேலும், 6 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இவர்களில் 5 பேர்  என்.ஆர்.காங்கிரஸிலிருந்து விலகி, சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: இதையடுத்து, திங்கள்கிழமை காலை புதுவை மாநில பாஜக பொறுப்பாளர்களான நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் என்.ரங்கசாமியை, புதுச்சேரி திலாசுப்பேட்டையில்  உள்ள அவரது இல்லத்தில்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். புதுவையில் ஆட்சியமைப்பது தொடர்பாக, அவருடன் அரை மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது, ரங்கசாமியை முதல்வராகவும், பாஜகவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவதும் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. பாஜகவுக்கு 2 அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவிகளை வழங்கவும் ரங்கசாமி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கூடுதலாக ஓர் அமைச்சர் பதவியை பாஜக தரப்பு கோரியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்,  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோயிலில் நடைபெற்றது.  கூட்டத்தில், சட்டப் பேரவை கட்சியின் தலைவராக என்.ரங்கசாமி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல, பாஜக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,  என்.ஆர்.காங்கிரஸூக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்தனர்.
துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு: இதையடுத்து, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு என்.ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் ஒன்றாகச் சென்று துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை செüந்தரராஜனை சந்தித்தனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, என்.ரங்கசாமி தலைமையில் ஆட்சியமைப்பதற்கான 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட துணைநிலை ஆளுநர், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவராக தேர்வான என்.ரங்கசாமி விரும்பும் நேரத்தில் ஆட்சியமைக்கவும், அவர்களுக்கு சட்டப்பூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் சம்மதம் தெரிவித்தார்.  .
விரைவில் பதவி ஏற்பு விழா: பின்னர் பேசிய ரங்கசாமி, விரைவில் நல்ல நாளில் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என்றார். ஆளுநர் மாளிகைக்கு என்.ரங்கசாமியுடன்   பாஜக எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். வருகிற வெள்ளிக்கிழமை (மே 7) புதுவை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com