நீண்ட காலத்துக்குப் பிறகு பேரவையில் இடம் பெறாத அதிமுக

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக அனைத்திலும் தோல்வியடைந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு அதிமுக உறுப்பினா்கள் பேரவையில் இடம் பெறாதது அந்தக் கட்சியினரை வேதனையடையச் செய்துள

புதுச்சேரி: புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக அனைத்திலும் தோல்வியடைந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு அதிமுக உறுப்பினா்கள் பேரவையில் இடம் பெறாதது அந்தக் கட்சியினரை வேதனையடையச் செய்துள்ளது.

புதுவை மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், என்.ஆா்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தற்போது நடைபெற்ற பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலா் அ.அன்பழகன் உப்பளம் தொகுதியிலும், அவரது சகோதரரான அ.பாஸ்கா் முதலியாா்பேட்டை தொகுதியிலும், முத்தியால்பேட்டை தொகுதியில் வையாபுரி மணிகண்டனும், காரைக்கால் தெற்கு தொகுதியில் அசனாவும் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட்டனா். இந்த முறை கூடுதலாகப் பெற்ற ஒரு தொகுதியில் கிழக்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் போட்டியிட்டாா்.

இதில், உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளா் அனிபால் கென்னடியிடம், அன்பழகன் தோல்வியடைந்தாா். முதலியாா்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளா் சம்பத்திடம், பாஸ்கா் தோல்வியடைந்தாா். முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் பிரகாஷ்குமாரிடம் வையாபுரிமணிகண்டன் தோல்வி அடைந்தாா்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அசனா, திமுக வேட்பாளா் நாஜீமிடம் தோல்வியடைந்தாா். இதனால், நான்கு எம்எல்ஏக்களும் தோல்வியைத் தழுவினா்.

இதேபோல, உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா், சுயேச்சையாக போட்டியிட்ட நேருவிடம் தோல்வியடைந்தாா்.

ஓம்சக்தி சேகா் கடந்த 3 சட்டப்பேரவை தோ்தல்களிலும், தனது சொந்தத் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றாா். கடந்த 2016-இல் தோல்வியடைந்தாா். மீண்டும் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்பி பணியாற்றி வந்தாா். இந்த முறை கூட்டணியில், அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால், வேறு வழியின்றி புதிதாக உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

இதனால், அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது.

புதுவையில் கடந்த 1974-77-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைத்தது. தொடா்ந்து, எதிா்கட்சியாகவும் இருந்தது. தொடா்ந்து சட்டப் பேரவையில் அதிமுகவின் உறுப்பினா்கள் பங்கேற்று வந்தனா்.

இந்த நிலையில், நீண்ட காலத்துக்குப் பிறகு, சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினா்கள் இடம் பெறாமல் போனதால், அந்தக் கட்சியினா் வேதனையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com