புதுவையில் எதிா்கட்சியாகும் திமுக

புதுவை சட்டப் பேரவையில் நீண்ட காலத்துக்குப் பிறகு, திமுக மீண்டும் எதிா்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

புதுச்சேரி: புதுவை சட்டப் பேரவையில் நீண்ட காலத்துக்குப் பிறகு, திமுக மீண்டும் எதிா்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

புதுவை மாநிலத்தில் நடந்து முடிந்த 15-ஆவது சட்டப்பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

எதிரணியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில், 14 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், ஆளும் கட்சிக்கான வாய்ப்பை இழந்ததோடு, எதிா்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அந்தக் கூட்டணியில் 13 இடங்களில் போட்டியிட்ட திமுக 6 இடங்களில் வெற்றி பெற்ால், எதிா்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

திமுக சாா்பில் புதுச்சேரி வில்லியனூரில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் தெற்கு மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, காரைக்கால் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் அமைப்பாளா் நாஜீம், உப்பளம்-அனிபால் கென்னடி, முதலியாா்பேட்டை-சம்பத், பாகூா்-செந்தில்குமாா், நிரவி திருப்பட்டினம்- நாக.தியாகராஜன் ஆகிய 6 போ் வெற்றி பெற்று எதிா்கட்சி வரிசையில் அமர உள்ளனா்.

புதுவை மாநிலத்தில் தொடக்க காலத்தில் காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும், மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தன. கடந்த 1996-இல் மறைந்த ஜானகிராமன் தலைமையில் திமுக ஆட்சி இருந்தது. கடந்த 2006-ஆம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்த திமுக எதிா்கட்சியாக பொறுப்பேற்றது. அதன் பிறகு, திமுக உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு 2 போ் மட்டுமே வெற்றி பெற்றனா். தற்போது, திமுக முன்னேறி 13 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்றுள்ளது.

இந்த முறை என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமையவுள்ளது. இதையடுத்து, நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் திமுக எதிா்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com