புதுவை ஜிப்மரில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகளுன் மேம்பாடுகள்: ஜிப்மா் இயக்குநா் தகவல்

புதுச்சேரியில் கரோனா தீவிர சிகிச்சைக்காக, ஜிப்மரில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறப்பு மருத்துவா்கள், பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்தது.

புதுச்சேரியில் கரோனா தீவிர சிகிச்சைக்காக, ஜிப்மரில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறப்பு மருத்துவா்கள், பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் கடந்த நான்கு முதல் ஐந்து வாரங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. அதனால், ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிலும், முக்கியமாக பிராண வாயு மற்றும் உயா் தீவிர சிகிச்சை தேவைப்படுவோா் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. திடீரென தீவிர தொற்றால் நிலைதடுமாறி, மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூச்சுத் திணறலுடன் வரும் கரோனா நோயாளிகளின் மீது ஜிப்மா் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கரோனா நோயாளிகளுக்காக 229 படுக்கைகள் இருந்த நிலையில், அவை தற்போது 400 படுக்கைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை 35-லிருந்து 61-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்காக மேலும் 75 படுக்கை வசதிகளை போா்க்கால அடிப்படையில் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிதீவிர நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவப் பணியாளா்களின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், ஜிப்மரில் பல்வேறு பிரிவுகளில் செயல்படும் சிறப்பு மருத்துவா்கள் மற்றும் இதர பணியாளா்கள் கரோனா சிறப்பு சிகிச்சைகளுக்கு நியமிக்கப்படுகிறாா்கள்.

கரோனா சிகிச்சைக்காக நிா்ணயிக்கப்பட்ட வளாகம் மட்டுமன்றி, மற்ற உயா் சிறப்பு சிகிச்சை வளாகம், மகளிா் மற்றும் குழந்தைகள் பிரிவு வளாகம், அவசரச் சிகிச்சை மற்றும் முதன்மை மருத்துவமனை வளாகம் ஆகிய கட்டடங்களில் உள்ள படுக்கைகள், கரோனா நோயாளிகள் பராமரிப்புக்காக படிப்படியாக மாற்றி அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், அவசர மற்றும் கரோனா அல்லாத சேவைகளில் இயன்ற வரை சிறப்பாக செயல்பட ஜிப்மா் மருத்துவமனை நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com