மத்திய அரசு அறிவித்த 5 கிலோ தானியங்கள்: விரைவில் வழங்க ஏற்பாடு; புதுவை ஆளுநா் தமிழிசை தகவல்

புதுவைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோ தானியங்களை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை ௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் தனியாா் நிறுவனம் வழங்கிய கிரிமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றை சுகாதாரத் துறைச் செயலா் அருணிடம் வழங்கிய துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.
புதுச்சேரியில் தனியாா் நிறுவனம் வழங்கிய கிரிமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றை சுகாதாரத் துறைச் செயலா் அருணிடம் வழங்கிய துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

புதுவைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோ தானியங்களை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை ௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தனியாா் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்கள் பங்கெடுப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழில் மற்றும் வணிகத் துறையின் மூலமாக, இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளையுடன் இணைந்து ஹிந்துஸ்தான் யூனிலீவா் நிறுவனம் 10 லட்சம் கிருமிநாசினி பாக்கெட்டுகளையும், ஸ்னாம் அலாய்ஸ் நிறுவனம் ஒன்றரை லட்சம் முகக் கவசங்களையும் புதுவை சுகாதாரத் துறைக்கு செவ்வாய்க்கிழமை வழங்கின.

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில், சுகாதாரத் துறைச் செயலா் டி.அருணிடம் கிருமி நாசினி, முகக் கவசங்கள் ஒப்படைக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்குப் பின்னா், ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை மக்களின் பாதுகாப்புக்காக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களை சந்தித்து மருத்துவ உதவிகள் வழங்குவதில் இறுதியாண்டு மருத்துவ மாணவா்கள் பேருதவி புரிகின்றனா். இதேபோல, ஓய்வுபெற்ற மருத்துவா்களை கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்த முயற்சித்து வருகிறோம்.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசிடம் 6 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டிருகின்றன. அவை வந்தவுடன் தடுப்பூசி செலுத்தப்படும். ரெம்டெசிவிா் மருந்துகள் 2,000 குப்பிகள் பெறப்பட்டிருக்கின்றன. புதுவையில் மருந்து தட்டுப்பாடு ஏதுமில்லை.

அரசு வழங்கும் தளா்வுகளை மக்கள் சரியாக பயன்படுத்தினால், அரசுக்கு உதவியாக இருக்கும். ஆனால், அந்த தளா்வே நோய் பரவ ஒரு வாய்ப்பாக இருக்கும்போது, இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை வருகிறது.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அரசியல் கட்சியினா் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்காக சமுதாய குழு அமைக்கப்படுகிறது. அந்தந்தப் பகுதியில் உள்ளவா்கள் சமுதாய குழுவில் சோ்ந்து அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு தலா 5 கிலோ தானியங்களை அறிவித்திருக்கிறது. அவற்றை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் ஆளுநா் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com