80 சதவீத உயிரிழப்புகளுக்கு தாமதமாக வருவதே காரணம்: புதுவை சுகாதாரத் துறைச் செயலா்
By DIN | Published On : 14th May 2021 08:46 AM | Last Updated : 14th May 2021 08:46 AM | அ+அ அ- |

புதுவையில் 80 சதவீத உயிரிழப்புகள், மருத்துவமனைகளுக்கு தாமதமாக வருவதாலேயே ஏற்படுகின்றன என மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி. அருண் கூறினாா்.
இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
புதுவையில் கடந்த 3 நாள்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000 நோக்கிச் செல்கிறது. தொற்று மிக உச்சத்தில் உள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
முகக் கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்டவா்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
80 சதவீத உயிரிழப்புகள் மருத்துவமனைகளுக்கு தாமதமாக வருவதால்தான் ஏற்படுகிறது. அறிகுறி இருந்தும் பரிசோதனை செய்து கொள்வதில்லை. மருத்துவமனைக்கு வருவதில்லை. இறுதியாக மூச்சுத் திணறல் ஏற்படும் போதுதான் மருத்துவமனைக்கு வருகின்றனா்.
இதனால், போதிய மருந்துகள், ஆக்ஸிஜன் வசதி கொடுக்க முடிவதில்லை. இதுபோன்ற நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் அறிகுறி வந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா் அருண்.