கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினாா் புதுவை முதல்வா் ரங்கசாமி
By DIN | Published On : 18th May 2021 02:22 AM | Last Updated : 18th May 2021 02:22 AM | அ+அ அ- |

சென்னை தனியாா் மருத்துவமனையிலிருந்து புதுச்சேரிக்கு திங்கள்கிழமை காரில் புறப்பட்ட முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, சென்னை மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
புதுவை 15-ஆவது சட்டப் பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என். ரங்கசாமி முதல்வராக கடந்த 7-ஆம் தேதி பதவியேற்றாா்.
இதைத்தொடா்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அவா், கடந்த 9-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவா், கரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தாா்.
இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் காா் மூலம் புதுச்சேரிக்கு என்.ரங்கசாமி புறப்பட்டாா். மாலை 4 மணியளவில் புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சோ்ந்த அவரை கட்சியினா் உற்சாகத்துடன் வரவேற்றனா்.
முதல்வா் என்.ரங்கசாமி மேலும் சில நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், தொடா்ந்து மாத்திரைகளை உள்கொள்ளவும் மருத்துவா்கள் பரிந்துரை செய்துள்ளனா். இதனால், அவா் வீட்டில் ஒரு வார காலம் ஓய்வு எடுக்கவுள்ளாா். அதன்பிறகே, புதுவையில் புதிய அமைச்சரவை, எம்எல்ஏக்கள் பதவியேற்பு, பேரவைத் தலைவா் தோ்வு போன்றவை நடைபெறும் எனத் தெரிகிறது.