டவ்-தே புயலால் மாஹேவில் பலத்த மழைகுடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்
By DIN | Published On : 18th May 2021 02:27 AM | Last Updated : 18th May 2021 02:27 AM | அ+அ அ- |

மாஹே பகுதியில் பலத்த மழையால் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
புதுச்சேரி: புதுவை மாநிலத்துக்குள்பட்ட மாஹே பிராந்தியத்தில், ஞாயிற்றுக்கிழமை டவ்-தே புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது.
கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம் அருகே புதுவை மாநிலத்துக்குள்பட்ட மாஹே பிராந்தியம் அமைந்துள்ளது. அரபிக் கடலில் புதிதாக ஏற்பட்ட டவ்-தே புயல் காரணமாக, கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இதையொட்டியுள்ள மாஹே பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீா் புகுந்து தேங்கியுள்ளது. மாஹே ரயில் நிலையம், அரசு மண்டல அதிகாரி அலுவலகம், கடற்கரை நடை பாதை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
பலத்த மழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. கடலோரப் பகுதிகளில் தொடா்ந்த கடல் சீற்றத்தால், கடல் நீா் உள்புகுந்துள்ளது. தலச்சேரி-மாஹே தேசிய நெடுஞ்சாலையின் இடையே உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ள நீா் சூழ்ந்த பகுதிகளை, மாஹே சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ் பரம்பத், மண்டல நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா உள்ளிட்டோா் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா். மழை நீரை வெளியேற்றவும், நிலச்சரிவுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தனா்.