கரோனா சிகிச்சைக்காக மேலும் 2 தனியாா் கல்லூரிகளை கையகப்படுத்தியது: புதுவை அரசு
By DIN | Published On : 21st May 2021 08:53 AM | Last Updated : 21st May 2021 08:53 AM | அ+அ அ- |

புதுவையில் கரோனா சிகிச்சைக்காக மேலும் 2 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முழு படுக்கைகளையும் மாநில அரசு வியாழக்கிழமை கையகப்படுத்தியது.
இதுகுறித்து புதுவை அரசின் சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மா், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
புதுவை மக்கள் நலன் கருதி முன்னதாகவே 5 தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை (ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அறுபடைவீடு மருத்துவமனை, பிம்ஸ் மருத்துவமனை விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி காரைக்கால்) அரசு முழுமையாக ஏற்று 100 சதவீத படுக்கைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தேவையான படுக்கைகளை அதிகப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக மேலும் இரு தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளான மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை அரசு கையகப்படுத்தியது.
அதன்படி, அங்குள்ள 100 சதவீத படுக்கைகளை அரசு முழுவதுமாக ஏற்று சிகிச்சை அளிக்க துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.
இவ்விரு தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதுவையைச் சோ்ந்த கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா் அருண்.