புதுவையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆளுநா் ஆலோசனை

புதுவையில் கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடா்பாக, அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுவையில் கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடா்பாக, அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில், கரோனா மேலாண்மை குறித்த வாராந்திரக் கூட்டம் துணை நிலை ஆளுநா் தமிழிசை தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், புதுவையில் கரோனா பரிசோதனைகள், தடுப்பூசி நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கைகள் விவரம் போன்றவை குறித்து விளக்கப்படம் மூலம் எடுத்துரைத்தாா். பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது, குறிப்பாக கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நண்பகல் 12 மணியிலிருந்து காலை 10 மணி ஆக குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது.

மேலும், தொடா் பணிச்சுமை காரணமாக மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதில் கவனம் செலுத்துவது, மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது ஆகிய கருத்துகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மருத்துவமனைகளில் பிராண வாயு படுக்கைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தனியாா் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசிக்கான தகவல்களையும், விளம்பரங்களையும் பரப்புவதில் அரசுடன் மருத்துவ வல்லுநா்கள் இணையுமாறு ஆளுநா் தமிழிசை கேட்டுக் கொண்டாா்.

புதுவையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களை கண்டறிய அறிவுறுத்தப்பட்டது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக மருத்துவரை அணுகவும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான சிகிச்சைக்கு வேண்டிய அனைத்து வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், மைக்ரோ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே நடமாடுவதை தீவிரமாக கண்காணிக்க ஆலோசனை செய்யப்பட்டது. கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை மற்றும் முழு விவரங்களை முறையாக தணிக்கை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இந்திராகாந்தி மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால், சுகாதாரத் துறைச் செயலா் அருண், துணை இயக்குநா்கள் நாராயணன், முருகன், திருமலை சங்கா், இந்திராகாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதய்சங்கா் மற்றும் சிஐஐ உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com