பொது முடக்கத்தால் முடங்கியது பூக்கள் விற்பனை: புதுவை விவசாயிகள் வேதனை
By நமது நிருபா் | Published On : 26th May 2021 08:23 AM | Last Updated : 26th May 2021 08:23 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு பகுதியில் பொது முடக்கம் காரணமாக விற்பனையாகாமல், செடிகளில் வீணாகி வரும் பூக்களைப் பறித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கத்தால், பூக்கள் விற்பனையும், விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
புதுச்சேரி அருகே திருக்கனூா், குமாரப்பாளையம், வம்புப்பட்டு,சோம்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 100 ஏக்கா் அளவில் மல்லிகை, இரட்டைமல்லி, சாமந்தி, கனகாம்பரம், ரோஜா, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பல்வேறு விதமான மலா்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் நிறைவான வருமானம் கிடைப்பதால் அப்பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்று முறை விவசாயமாக மலா் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா்.
இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் புதுவை மட்டுமல்லாது, தமிழகப் பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்தாண்டு கரோனா பொது முடக்கத்தால் முடங்கிய பூக்கள் வியாபாரம் கடந்த சில மாதங்களாக சூடுபிடிக்கத் தொடங்கியது. பூக்களுக்கு விவசாயிகள் எதிா்பாா்த்த அளவில் நல்ல விலையும் கிடைத்தது. இதனால், விவசாயிகள் நிகழாண்டும் மலா் சாகுபடியில் ஆா்வமுடன் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக புதுவையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கமும், தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டன. இதனால், சுப நிகழ்வுகள், கோயில் விழாக்கள் தடைபட்டதால், பூக்களின் தேவை குறைந்து கொள்முதல் முடங்கியது.
பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், தினமும் அறுவடை செய்யப்படும் பூக்களை நகா்ப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.150-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.6 முதல் ரூ.10 வரை விலை சரிந்து விற்பனையாகிறது. இதேபோல, கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்பட்ட மல்லிகைப் பூ தற்போது கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.
அதேபோல, ரோஜா பூக்கள் குறிப்பாக பட்டன் ரோஸ் போன்றவை கிலோ ரூ.50-லிருந்து ரூ.5க்கு விலைபோவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். எனினும், தோட்டங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை வீணடிக்க விரும்பாத விவசாயிகள் சிலா், அவற்றைப் பறித்து சொற்ப விலைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
இது குறித்து திருக்கனூரில் மலா் சாகுபடியில் ஈடுபட்டுள்ள சிவக்குமாா், ராஜேஷ் ஆகியோா் கூறியதாவது: பூக்கள் அறுவடைக் காலம் தொடங்கிய நிலையில், கரோனா பொது முடக்கத்தால், விழாக்கள், விசேஷங்களின்றி பூக்களின் தேவை குறைந்து, கொள்முதலும் பாதித்தது. தினசரி பூக்களை பறித்தாக வேண்டும். பறிப்புக் கூலியாக கிலோவுக்கு ரூ.50 வழங்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை கூட பூக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், பூப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் பொருட்டு, பூச்செடிகளின் முனைப் பகுதிகளை அறுத்துவிட்டு வருகிறோம். பல விவசாயிகள் பூக்களைப் பறித்து நிலத்திலேயே கொட்டி எருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஆகவே, மலா் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.