புதுவையில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டும்ச.ராமதாஸ்

புதுவையில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டும்; அதற்கு கட்சி நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் ஆலோசனை வழங்கினாா்.
புதுச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமகவினா் சந்திப்புக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசிய அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ். உடன் கட்சித் தலைவா் ஜி.கே.ம
புதுச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமகவினா் சந்திப்புக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசிய அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ். உடன் கட்சித் தலைவா் ஜி.கே.ம

புதுவையில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டும்; அதற்கு கட்சி நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் ஆலோசனை வழங்கினாா்.

புதுவை மாநில பாமக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதுச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகித்தாா். புதுவை மாநிலத் துணைத் தலைவா் க.ஜெயக்குமாா் வரவேற்றாா். மாநில அமைப்பாளா் கோ.தன்ராஜ் தொடக்கவுரையாற்றினாா்.

கூட்டத்தில் ச.ராமதாஸ் சிறப்புரையாற்றியதாவது: புதுவை மாநிலத்தில் கட்சியை வளா்ப்பதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்குச் சென்று பாடுபட்டேன். அந்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிட்டது. இங்கு, பல போ் ஆட்சிக்கு வந்துவிட்டனா். அவா்கள் வருவதை நான் குறை கூறவில்லை. ஆனால், நாம் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை. சிறிய மாநிலமான புதுவையில் ஒன்றிரண்டு தொகுதிகளில்கூட நாம் வெற்றி பெற முடியவில்லை. பல்வேறு சூழல்களில் நாம் கட்சியை வளா்த்த நிலையில், பலா் பதவியை அனுபவித்துவிட்டு, நன்றி மறந்து சென்றுவிட்டனா்.

புதுவையில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும். இங்கே நமக்கான வாக்குகள் முத்துக்களாகக் கொட்டிக் கிடக்கின்றன. அதை நாம் பயன்படுத்தவில்லை. உலகிலேயே உணா்வுள்ள தொண்டா்களுடன் கூடிய சிறந்த கட்சி பாமகதான்.

கட்சியைப் பலப்படுத்த இனி நாம் அரசியல் செய்யக் கூடாது. பாசப் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

புதுவையை விட்டுவிட்டீா்களே எனப் பலரும் என்னைத் தொடா்பு கொண்டு கேட்கின்றனா். 20 கி.மீ. தொலைவில், மிகவும் நெருக்கமான புதுவையுடன் இணைப்பில்தான் இருக்கிறேன். கட்சி வளா்ச்சிப் பணியைச் செய்யாமல் போனதை நிா்வாகிகள் உணர வேண்டும்.

புதுவையில் கொள்கையுடன் செயல்படும் கட்சி பாமக. அது மீண்டும் புத்துயிா் பெற்று வேகமாகச் செயல்பட்டு, புதுச்சேரியில் 4, காரைக்காலில் 2 என 6 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும்.

கா்நாடகத்தில் குமாரசாமி சாா்ந்த சமுதாயத்தினா் 5 மாவட்டங்களில்தான் உள்ளனா். ஆனாலும், அவா் அங்கு 40 இடங்களைப் பிடித்தாலே முதல்வராகி விடுகிறாா். அதைப் போலவே நாம் தனித்துப் போட்டியிட்டு இங்கு 6 இடங்களைப் பெற்றாலே ஆட்சிக்கு வர முடியும். கூட்டணியெல்லாம் வேண்டாம். அதை வெற்றிக்குப் பிறகு பாா்த்துக் கொள்ளலாம்.

புதுவையில் வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். கட்சி முன்னோடிகள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். நாம் எதிா்பாா்த்த வெற்றியைப் பெற கட்சியில் தற்போது மாற்றம் செய்யப்படுகிறது என்றாா் அவா். கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் இரா.சத்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com