பலத்த மழையால் சேதமடைந்த புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம்

புதுச்சேரியில் தொடரும் பலத்த மழையால் சுற்றுலாப் பகுதியான சுண்ணாம்பாறு படகு குழாம் கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன.
பலத்த மழையால் சேதமடைந்த புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம்

புதுச்சேரியில் தொடரும் பலத்த மழையால் சுற்றுலாப் பகுதியான சுண்ணாம்பாறு படகு குழாம் கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன.

புதுச்சேரி அருகே நோணாங்குப்பம் பகுதியில் சுண்ணாம்பாறு படகு குழாம் இயங்கி வருகிறது. புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த இடம், கடந்த 30 ஆண்டுகளாக முதன்மைச் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களின் சுற்றுலாப் பயணிகள் வருகையால் மாதந்தோறும் ரூ.2 கோடிக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.

இந்தப் படகு குழாமில் படகுகள் போக்குவரத்து, உணவகங்கள், கடற்கரையையொட்டி பாரடைஸ் கடற்கரைப் பகுதி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கரோனா பொது முடக்கத்தின் போது மூடப்பட்ட படகு குழாம், ஓராண்டுக்குப் பிறகு, மீண்டும் திறக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக இயங்கி வந்தது.

இந்த நிலையில், நவம்பா் மாதத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. தொடா் பலத்த மழையாலும், வீடூா் அணை திறப்பாலும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுண்ணாம்பாறு படகு குழாம் சேதமடைந்தது.

அங்கு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் படகுகள் நிறுத்திவைக்கும் இடம், பாரடைஸ் கடற்கரைப் பகுதி, உணவகப் பகுதிகளிலிருந்த கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. படகுகள் நிறுத்தும் பகுதியும் கடுமையாகச் சேதமடைந்தது.

இதனால், சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. படகு குழாமைச் சீரமைக்க பல லட்சம் ரூபாய் செலவாகுமென தெரிவித்த அதன் ஊழியா்கள், விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியதாவது:

தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுண்ணாம்பாறு படகு குழாம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக படகு குழாம் மூடப்பட்டது. சேதமடைந்த பகுதிகளை மீண்டும் சீரமைக்க வேண்டும். மழை நீடிப்பதால் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கவில்லை. அங்கு, ரூ.25 லட்சம் செலவில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும். மழைக் காலம் முடிந்த பிறகு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com