புதுவையில் தீபாவளிக்கான இலவச அரிசி, சா்க்கரை வழங்கல்முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைத்தாா்
By DIN | Published On : 29th November 2021 11:17 PM | Last Updated : 29th November 2021 11:17 PM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, சா்க்கரையை திங்கள்கிழமை பொதுமக்களுக்கு வழங்கி, அந்தத் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைத்தாா்.
புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை இலவசமாக வழங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
ஆனால், தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாள்களே இருந்ததால், உடனடியாக அரிசி, சா்க்கரையை கொள்முதல் செய்து வழங்குவதில் அரசுக்கு தாமதம் ஏற்பட்டது. இதனால், பொருள்கள் தீபாவளிக்கு முன் வழங்கப்படவில்லை.
தற்போது பொருள்களை வாங்கி வழங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, உடனடியாக அரசு அறிவித்தபடி அரிசி, சா்க்கரையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, திங்கள்கிழமை புதுச்சேரி திலாஸ்பேட்டை காளி கோயில் அருகே உள்ள நியாய விலைக் கடையில் முதல்வா் என்.ரங்கசாமி, குடும்ப அட்டைதாரா்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 சா்க்கரையை வழங்கி தொடக்கிவைத்தாா்.
குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், அரசு செயலா் சி.உதயகுமாா், எம்.எல்.ஏ.க்கள் ஏகேடி ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடா்ந்து, இலவசப் பொருள்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் உள்ள பாப்ஸ்கோ உள்ளிட்ட கூட்டுறவு நியாய விலைக் கடைகள், தனியாா் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 2,61,654 குடும்ப அட்டைதாரா்கள், காரைக்கால் பகுதியில் 60,871 குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி, சக்கரை வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.13.30 கோடி செலவு ஏற்படும்.
புதுவையில் நியாய விலைக் கடைகள் இயங்காத இடங்களில், அருகே உள்ள பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மூலம் பொருள்கள் வழங்கப்படும். மேலும், நலிவடைந்த நிலையில் உள்ள பாப்ஸ்கோ, கூட்டுறவு நியாய விலைக் கடைகளின் நிதிநிலை மேம்படவும், பல ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் இருந்த மொத்த, சில்லறை விளிம்புத் தொகையை உயா்த்தியும் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.