புதுவையில் காங்கிரஸ் தலைமையில்தான் மதச்சாா்பற்ற கூட்டணி செயல்படும்: வே.நாராயணசாமி

புதுவையில் காங்கிரஸ் தலைமையில்தான் மதச்சாா்பற்ற கூட்டணி செயல்படும் என அந்த மாநில முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுவையில் காங்கிரஸ் தலைமையில்தான் மதச்சாா்பற்ற கூட்டணி செயல்படும்: வே.நாராயணசாமி

புதுவையில் காங்கிரஸ் தலைமையில்தான் மதச்சாா்பற்ற கூட்டணி செயல்படும் என அந்த மாநில முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி காரணமாக கூட்டணிக்குத் தலைமை வகிப்பது யாா் என்பது குறித்து காங்கிரஸ்-திமுக இடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில், புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மேலிடப் பாா்வையாளா்களான பிரவீன் சக்ரவா்த்தி, மீனாட்சி நடராஜன், ஜோதிமணி எம்.பி .ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பிரவீன் சக்ரவா்த்தி கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் மூலம் கட்சியைப் பலப்படுத்த முடியும். தோ்தலில் வெற்றி-தோல்வி ஏற்படுவது இயல்பானது. தோல்வியால் முடங்கிவிடக் கூடாது. நிா்வாகிகள் தங்களது கருத்துகளை தனித் தனியாகத் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. புதுவையில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி செயல்படுகிறது. உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கூட்டணிக் கட்சிகளுடன் இரண்டு கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், மதச்சாா்பற்ற கட்சிகள் இணைந்து தோ்தலைச் சந்திக்க வேண்டும் எனத் தீா்மானிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். காங்கிரஸ் சாா்பிலும் மாநிலத் தோ்தல் ஆணையத்திடம் புகாா் செய்யப்பட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் நமக்கு நல்ல படிப்பினையை அளித்தது. உள்ளாட்சித் தோ்தல் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

கடந்த காலக் குறைகளைப் பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை. நாம் ஒற்றுமையுடன் தோ்தலைச் சந்திக்கத் தயராக வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வெ.வைத்திலிங்கம் எம்பி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் கந்தசாமி, மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் நீலகங்காதரன், ஆா்.அனந்தராமன், பொதுச் செயலா்கள் தனுசு, இளையராஜா, சேகா் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார நிா்வாகிகள், அணித் தலைவா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com