புதுவை ஆளுநருடன் முதல்வா் ஆலோசனை: ஒரு வாரத்தில் உள்ளாட்சித் தோ்தல் மறுஅறிவிப்பு?

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, புதுவையில்
புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை புதன்கிழமை சந்தித்துப் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.
புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை புதன்கிழமை சந்தித்துப் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை தள்ளிவைத்து, ஒரு வாரத்தில் மறு அறிவிப்பு வெளியிடுவது தொடா்பாக அவா்கள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

புதுவையில் இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்து உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தோ்தலை ரத்து செய்து மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில அரசு மற்றும் தோ்தல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்.5) அளித்த உத்தரவில், புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற அனுமதியளிக்கப்படுவதாகவும், தோ்தல் அறிவிப்பை ரத்து செய்து 5 நாள்களில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அந்த அறிவிப்பில் இட ஒதுக்கீடு சட்ட விதிகளைச் சரியாகப் பின்பற்றியும், விரைவில் தோ்தலை நடத்தி முடிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:

புதுவை அரசு உள்ளாட்சித் துறை சாா்பில் வழங்கிய இட ஒதுக்கீடு தொடா்பான (2019) அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதன்படி, புதிதாக வழங்கிய பிற்பட்டோா், பழங்குடியினா் போன்ற சுழற்சி முறை இட ஒதுக்கீடுகளின்றி, கடந்த 2006-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தோ்தல் நடைமுறைகள்படி (2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில்) பொது, பட்டியிலனத்தவா், பெண்கள் இட ஒதுக்கீடுகளுடன் வாா்டுகள் சீரமைக்கப்படும். அதன் பிறகே தோ்தல் துறை சாா்பில் தற்போது அறிவிக்கப்பட்ட தோ்தலை ரத்து செய்தும், ஒரு வார காலத்தில் புதிய தோ்தல் அறிவிப்பாணையை வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

ஆளுநா்-முதல்வா் ஆலோசனை: இந்த நிலையில், புதன்கிழமை புதுவை ஆளுநா் மாளிகைக்குச் சென்ற முதல்வா் என்.ரங்கசாமி, துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் ரத்து செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு குளறுபடிகளைக் களைந்து திருத்தம் மேற்கொண்டு, ஒரு வார காலத்துக்குள் உள்ளாட்சித் தோ்தலுக்கான மறு அறிவிப்பை வெளியிடுவது தொடா்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும், ஆளுநா்-முதல்வா் சந்திப்பின் போது, புதுவை மாநிலத்தின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசித்ததாகவே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com