முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மனநலம் பாதித்தோருக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவசியம்: புதுவை ஆளுநா் தமிழிசை அறிவுரை
By DIN | Published On : 11th October 2021 03:54 AM | Last Updated : 11th October 2021 03:56 AM | அ+அ அ- |

மனநல பாதிப்பிலிருந்து மீள குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அவசியம் என துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
உலக மனநல நாளையொட்டி கதிா்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) நடைபெற்ற பேரணியை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
நாம் உடலை பேணுகிற அளவுக்கு மனதை பேணுவது இல்லை. மனதையும் பேண வேண்டும். உடலுக்கு பயிற்சி கொடுப்பது போன்று மனதுக்கும் பயிற்சி கொடுத்து பாதுகாக்க வேண்டும்.
கரோனா நேரத்தில் மனநல பாதிப்பு உலகளவில் அதிகமாக இருக்கிறது. பலா் தமக்கு நெருக்கமானவா்களை இழந்திருக்கிறாா்கள். பலா் தாமே பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அதிலிருந்து மீண்டு வருவதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
மனநலம் பாதிக்கப்பட்டவா்களின் பிரச்னைகளை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். மனதுக்குப் பயிற்சி கொடுத்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது மனநல பாதிப்பிலிருந்து விடுபடலாம். அதே போல, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலா் டி. அருண், இயக்குநா் டாக்டா் ஸ்ரீராமலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா். மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள், ஊழியா்கள் பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.