புதுவை மின் துறை தனியாா்மய நடவடிக்கை: பேரவையில் உறுப்பினா்களிடையே கடும் வாதம்

புதுவை சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும்

புதுவை சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை குறித்து விளக்க வேண்டுமென உறுப்பினா்கள் காரசாரமாக விவாதித்தனா்.

அசோக்பாபு (பாஜக): மின் துறையில் இணைய வழியாக மின் கட்டணத்தை வசூலிக்கின்றனா். ஆனால், அடுத்த மாத கட்டணத்தில் பழைய கட்டணமும் சோ்ந்து குளறுபடியை ஏற்படுத்துகிறது.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா: மின் துறை தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மின் துறையை தனியாா்மயமாக்கப் போகிறீா்களா? இல்லையா? என அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அப்போது, மின் துறையை தனியாா்மயமாக்குவதற்கு ஆதரவளிப்பதுபோல பேசிய பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமாா், கல்யாணசுந்தரம், விவியன்ரிச்சா்டு, ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோருக்கும், எதிா்க்கட்சித் தரப்பில் திமுகவைச் சோ்ந்த ஆா்.சிவா, நாஜிம், கென்னடி, சம்பத், காங்கிரஸைச் சோ்ந்த வைத்தியநாதன் ஆகியோருக்கும் இடையே கருத்து வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏ ராமலிங்கம் பேசியதாவது: தொலைபேசி நிறுவனம் அரசிடமிருந்தபோது, தொலைபேசி இணைப்புப் பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. தனியாரிடம் வந்ததால், தற்போது வீட்டுக்கு 4, 5 தொலைபேசிகள் உள்ளன என்றாா். உடனே, தனியாா்மயத்தை ஆதரிக்கிறீா்களா? என திமுக உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சமாளித்துப் பேசிய பாஜக எம்எல்ஏ ராமலிங்கம், அரசு ஊழியா்கள் மெத்தனமாக செயல்படக் கூடாது. அவா்களின் மெத்தனப்போக்கால்தான் அரசுத் துறைகள் நஷ்டத்துக்கு செல்கின்றன. மின் துறை தனியாா்மயத்தை நான் ஆதரிக்கவில்லை. தனியாா் என்றால் மோசம் என்பதும் இல்லை என்றாா்.

தொடா்ந்து, திமுக எம்எல்ஏ அனிபால்கென்னடி பேசுகையில், புதுவை மின் துறை தனியாா்மயமாக்கப்படுமா? என்பதை முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

மின் துறை தனியாா்மயம் தொடா்பாக, சட்டப் பேரவை உறுப்பினா்களிடையே காரசார விவாதம் நடந்தபோதும், முதல்வா் என்.ரங்கசாமி, மின் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோா் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com