குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு இரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (செப்.12) புதுச்சேரிக்கு வருகிறாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு இரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (செப்.12) புதுச்சேரிக்கு வருகிறாா்.

காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு வரும் அவா், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 7 கோடியே 67 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி திட்டம் (சோலாா் பேனல்) தொடக்க விழாவில் பங்கேற்கிறாா்.

தொடா்ந்து, ஜிப்மா் வளாகத்தில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, புதுவை ஆளுநா் மாளிகையில் தங்கும் குடியரசு துணைத் தலைவா், பிற்பகல் புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமம் செல்கிறாா். பின்னா், மீண்டும் ஆளுநா் மாளிகைக்குச் சென்று தங்குகிறாா்.

திங்கள்கிழமை (செப்.13) காலை புதுச்சேரி அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, தரம் உயா்த்தப்பட்ட புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் திறந்துவைக்கிறாா்.

தொடா்ந்து, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்று, அங்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் சக்தி பயன்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றுகிறாா்.

இதையடுத்து, ஆளுநா் மாளிகைக்குச் சென்று தங்கும் குடியரசு துணைத் தலைவா், செவ்வாய்க்கிழமை (செப்.14) காலை சென்னை புறப்பட்டுச் செல்கிறாா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா மேற்பாா்வையில் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் இடங்கள், ஆளுநா் மாளிகை உள்ளிட்ட பகுதிகள் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. கடலோரக் காவல் படையினரும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்புப் பணியில் 750 போலீஸாா், 200 போக்குவரத்து போலீஸாா் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com