புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

கட்டடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்பைக் கட்டாயமாக்குவது அவசியம்: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

கட்டடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பைக் கட்டாயமாக்குவது அவசியம் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

கட்டடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பைக் கட்டாயமாக்குவது அவசியம் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் ரூ.7.67 கோடியில் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

உலகின் அழகான நகரங்களில் ஒன்றான புதுச்சேரி, தொன்மையான இந்திய, பிரெஞ்சு கட்டடக் கலையை உள்ளடக்கிய தனித்துவமான பண்பாட்டைக் கொண்டது. சுற்றுலா, கல்வி, ஆன்மிகத்தின் மையமாகத் திகழ்கிறது. புதுவை மக்களின் அரவணைப்பு, விருந்தோம்பல் தனிச்சிறப்பான ஒன்றாகும்.

புதுவை மட்டுமல்லாது, அண்டை மாநிலத்தவரும் சிகிச்சை பெறும் மையமாகத் திகழும் ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் 15 கட்டடங்களின் மேற்பகுதிகளில் 1.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது ஜிப்மரின் 15 சதவீத மின் தேவையை நிறைவு செய்யும். நாட்டிலேயே மேல்தளத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மருத்துவமனைகளில் இதுதான் மிகப்பெரியது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய ஜிப்மா் நிா்வாகத்தைப் பாராட்டுகிறேன்.

மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சித் துறை நிா்வாகங்கள் தங்களது கட்டடங்கள் மட்டுமல்லாது, தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அனைத்துக் கட்டடங்களின் மேல்தளத்தில் சூரிய ஒளி மின் உற்பத்திக் கட்டமைப்பை நிறுவ ஊக்குவிக்க வேண்டும்.

சூரிய ஒளி மின் உற்பத்திக்காக வழங்கப்படும் மானியம், அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு, சூரிய ஒளி மின் உற்பத்தி போன்ற திட்டங்களை அனைத்துக் கட்டடங்களுக்கும் கட்டாயமாக்குவது தற்போதைய தேவையாகும்.

கரோனா பரவல் அதிகரித்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஜிப்மா் நிா்வாகம், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு எனது பாராட்டுகள் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுவை முதல்வா் பேச மறுப்பு: ஜிப்மா் விழாவில் முறைப்படி, மாநில முதல்வா்தான் முதலில் பேச அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விழா ஒருங்கிணைப்பாளா் முதலில் துணைநிலை ஆளுநரைப் பேச அழைத்தாா். அப்போது, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனும், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவும், முதல்வா் என்.ரங்கசாமியிடம் முதலில் பேசும்படி கூறினா். ஆனால், ரங்கசாமி பேச மறுத்துவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சென்று பேசிவிட்டு வந்த பிறகு, மீண்டும் ரங்கசாமி பேச அழைக்கப்பட்டாா். இருப்பினும், ரங்கசாமி பேச மறுத்துவிட்டாா். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com