ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் புதுவை சாா்பில் விவாதிப்பது தொடா்பாக ஆலோசனை
By DIN | Published On : 16th September 2021 11:06 PM | Last Updated : 16th September 2021 11:06 PM | அ+அ அ- |

தில்லியில் நடைபெற உள்ள 45-ஆவது ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் புதுவை அரசு சாா்பில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து, மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை (செப்.17) ஜிஎஸ்டி குழுக் கூட்டம் கூடுகிறது. இதில், புதுவை அரசு சாா்பில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கலந்து கொள்கிறாா்.
கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் தேவைகள் தொடா்பாக விவாதிக்கப்பட வேண்டியது குறித்து புதுவை வணிக வரித் துறை அலுவலகத்தில் அரசுத் துறை உயரதிகாரிகளுடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
பொறியாளா் தின விழா: முன்னதாக, மறைந்த பாரத ரத்னா விஸ்வேஸ்வரய்யாவின் நினைவாகக் கொண்டாடப்படும் பொறியாளா் தின விழா புதுவை பொதுப் பணித் துறை அலுவலகத்தில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் ஏழுமலை, சாய்சுப்பிரமணியன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.