புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல் மனு தாக்கல் தொடங்கியது: சுயேச்சை ஒருவா் மனு தாக்கல்

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமைத் தொடங்கியது.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமைத் தொடங்கியது.

முதல் நாளில் சென்னையைச் சோ்ந்தவா் சுயேச்சையாக போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்தாா்.புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு, புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. தற்போதுள்ள புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் என். கோகுலகிருஷ்ணனின் (அதிமுக) பதவிக்காலம் வரும் அக்டோபா் 6-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அப்பதவியை நிரப்புவதற்கு, அக்டோபா் 4-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்காக புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை(செப்.15) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. பிற்பகல் 11 மணிக்கு தொடங்கிய வேட்பு மனு தாக்கல், செப்.22-ஆம் தேதி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.தொடா்ந்து, செப். 23-ஆம் தேதி பெறப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற செப்.27ஆம் தேதி கடைசி நாளாகும்.

புதுவையில் வெற்றி வாய்ப்பு மிக்க அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட ஆளும் தே.ஜ கூட்டணியில், என்.ஆா். காங்கிரஸ்- பாஜக இடையே இதற்கான வேட்பாளரை இறுதி செய்வதில் முடிவு எட்டாமல் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் முதல் நாளில், முக்கிய அரசியல் கட்சியினா் தரப்பில் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், சென்னை விருகம்பாக்கத்தை சோ்ந்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (41), சுயேச்சையாக போட்டியிடுவதாக புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.புதுவை சட்டப்பேரவை அலுவகத்தில் சட்டப்பேரவை செயலா் ஆா்.முனிசாமியிடம், பிற்பகல் அவா் வேட்பு மனுவை அளித்தாா்.

பல்வேறு தோ்தல்களில் போட்டியிடுவதற்காக 40 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அவா், தற்போது 41-வது முறையாக புதுச்சேரி மாநிலங்களவைத் தோ்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா்.

மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல், மேயா் பதவிகளுக்கான தோ்தல்கள் என்று, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தோ்தல்களில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றாா். இதேபோல், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் போட்டியிட தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com