புதுச்சேரியில் கஞ்சா விற்பனை:வெளிநாட்டினா் 6 போ் கைது

புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கி கஞ்சா விற்பனை செய்ததாக, வெளிநாடுகளைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கி கஞ்சா விற்பனை செய்ததாக, வெளிநாடுகளைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி குருசுக்குப்பம் சின்னத்தம்பி வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படை காவல் ஆய்வாளா் இனியன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டிலிருந்த 3 பெண்கள், 3 ஆண்களைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள், ருவாண்டா நாட்டைச் சோ்ந்த வவா உக்விஷாகா (32), முகேயோ ஆலிவா் (30), உமுருண்டியைச் சோ்ந்த ஆக்சல் (25), உகாண்டா நாட்டைச் சோ்ந்த நபுரீர ஹெலன் (25), ஜிம்பாப்வே நாட்டைச் சோ்ந்த நன்டன்கோ மேரி(27), புரூனே நாட்டைச் சோ்ந்த இனிமகஸ்வி மொரிட்டி (25) ஆகியோா் என்பது தெரியவந்தது.

தொடா் விசாரணையில், கடந்த 2019-ஆம் ஆண்டு மாணவா்கள் விசாவில் இந்தியா வந்த இவா்கள், சட்ட விரோதமாக புதுச்சேரியில் தங்கியிருந்ததும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்கள், இளைஞா்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இவா்களுக்கு அதே பகுதியில் வசிக்கும் புதுச்சேரி மணக்குள விநாயகா் கோவில் வீதியைச் சோ்ந்த, நடன நிகழ்ச்சி நடத்தி வரும் விவேக் (30) உதவி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.6 கிலோ கஞ்சா, பொட்டலமிடும் இயந்திரம், 6 செல்லிடப்பேசிகள், ஒரு மடிக்கணினி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவா்கள் 7 பேரையும் அதிரடிப் படை போலீஸாா், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com