புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவி: என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக இடையே இழுபறி

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு ஆளும் தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக போட்டியிடப் போவதாக முடிவு

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு ஆளும் தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக போட்டியிடப் போவதாக முடிவு செய்துள்ள நிலையில், என்.ஆா்.காங்கிரஸ் மெளனம் காப்பதால் முடிவு தெரியாமல் இழுபறி நீடிக்கிறது.

புதுவையில் உள்ள 30 எம்எல்ஏ-க்களில், ஆளும் தே.ஜ. கூட்டணிக்கு 16 எம்எல்ஏ-க்களும், 3 சுயேச்சைகள் ஆதரவும் உள்ளதால், இந்தக் கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. இதனால், தே.ஜ. கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக இடையே மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெற போட்டி நிலவுகிறது.

தே.ஜ. கூட்டணியில், நியமன எம்எல்ஏ-க்கள் நியமனத்தில் பாஜகவிடம் கோட்டை விட்டதால், இந்த முறை மாநிலங்களவை உறுப்பினா் பதவியை பெற்றே தீருவதென முதல்வா் என்.ரங்கசாமி உறுதியுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென புதுவை பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டி, மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தங்களது கட்சி போட்டியிடப் போவதாகவும், அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கூட்டணித் தலைவரான முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து தீா்மானக் கடிதத்தை வழங்கினா்.

இதற்கு என்.ஆா்.காங்கிரஸ் (என்.ரங்கசாமி) தரப்பில் பதிலளிக்காமல் மெளனம் காப்பதாலும், பாஜக மேலிடத் தரப்பிலிருந்தும் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தாமல் உள்ளதாலும், தே.ஜ. கூட்டணியில் போட்டியிடப் போவது யாா் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாஜக தரப்பில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நிறுத்தப்படுவாா் என்று பேசப்பட்ட நிலையில், அவா் மத்தியப் பிரதேசத்திலிருந்து போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தச் சந்தேகமும் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, புதுவை பாஜக தலைவா் வி.சாமிநாதன் உள்ளிட்டோா் போட்டியிட விரும்பம் தெரிவித்து பாஜக மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனா்.

ஆனால், முதல்வா் என்.ரங்கசாமி, என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக இருப்பதாக அந்தக் கட்சியினா் தெரிவித்தனா். அந்தக் கட்சி சாா்பில், முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் போட்டியிட விருப்பம் தெரிவித்து ரங்கசாமியிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாராம்.

இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த திரைப்படத் தயாரிப்பாளா் ஐசரி கணேஷ், புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் முதல்வா் என்.ரங்கசாமியுடன் கலந்து கொண்டாா். அவா், புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகத் தகவல் பரவியது.

வருகிற 22-ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். ஆனால், தே.ஜ. கூட்டணியில் யாா் வேட்பாளா் என்பது இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறி நீடிக்கிறது. அதே நேரம், பாஜக தலைமை, இரு தினங்களுக்குள் கூட்டணித் தலைவரான என்.ரங்கசாமியிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, முடிவை அறிவிக்கும் என அந்தக் கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com