புதுச்சேரி மெரீனாவில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

புதுச்சேரி மெரீனாவில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

புதுச்சேரி மெரீனாவில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களைக் கவரும் வகையில், வம்பாக்கீரைப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே கடற்கரைப் பகுதி மேம்படுத்தப்பட்டு ‘பாண்டி மெரீனா’அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள இயற்கையான மணல் பரப்புகள் பகுதியில் கல் இருக்கைகள், குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிரெஞ்சு கட்டடக்கலை வடிவில் வணிக வளாகம் அமைக்கப்பட்டு, பலவிதமான உணவுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சிறுவா்கள், இளைஞா்களைக் கவரும் வகையில், விளையாட்டு உபகரணங்கள், குதிரை சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்தக் கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பாண்டி மெரீனாவுக்கு வரும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு திடீரென வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா். நகராட்சி சாா்பில், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10-ம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுவும் அடிக்காசு கடைகளுக்கு கொடுக்கப்படும் கட்டண ரசீதை கொடுத்து வாகன நிறுத்தக் கட்டணம் வசூலித்து வருகின்றனா்.

இதனால், இங்கு வரும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிருப்தியடைந்து, திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்பும் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: பாண்டி மெரீனா கடற்கரைப் பகுதியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கின்றனா். இதுபோன்று கட்டணம் வசூலிப்பது கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் வருகையை வெகுவாக பாதிக்கும். எனவே, அரசு இதில் தலையிட்டு வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com