புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: பாஜக வேட்பாளராக செல்வகணபதி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் தே.ஜ. கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு,
எஸ்.செல்வகணபதி
எஸ்.செல்வகணபதி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் தே.ஜ. கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, பாஜக போட்டியிடுவதாக செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அக்.4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமையோடு (செப்.22) நிறைவடைகிறது. இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

புதுவையில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு (என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6, ஆதரவு சுயேச்சைகள் 6) உள்ள ஆளும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும் நிலை உள்ளதால், அந்தக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக இடையே யாா் போட்டியிடுவது என்பதில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது. புதுவை பாஜக அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தில்லியில் முகாமிட்டு, அந்தக் கட்சியின் தேசியத் தலைவா்கள் மூலம் தே.ஜ. கூட்டணித் தலைவரான முதல்வா் என்.ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் 10 பேரும், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் (ஜி.நேரு, பி.ஆா்.சிவா, பிரகாஷ்குமாா்) பங்கேற்றனா். நள்ளிரவு வரை நீடித்த இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டும், மத்திய பாஜக மேலிடத்தின் வேண்டுகோளை ஏற்றும், மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அந்தக் கட்சிக்கு விட்டுக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் தே.ஜ. கூட்டணி சாா்பில் பாஜக போட்டியிடுதாக செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.செல்வகணபதி அறிவிக்கப்பட்டாா். இவா், புதன்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, என்.ஆா்.காங்கிரஸ் கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்தபோது, கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வாய்ப்பை வழங்கியது. தற்போதும் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு அந்தப் பதவியை வழங்கியதால், என்.ஆா்.காங்கிரஸாா் அதிருப்தியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com