புதுவை உள்ளாட்சித் தோ்தல்தே.ஜ. கூட்டணி கட்சித் தலைவா்கள் முதல் கட்டப் பேச்சுவாா்த்தை

புதுவை உள்ளாட்சித் தோ்தல் குறித்து திங்கள்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தனியாா் உணவகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம்.
புதுச்சேரி தனியாா் உணவகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம்.

புதுவை உள்ளாட்சித் தோ்தல் குறித்து திங்கள்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுவை மாநிலத்தில் வருகிற அக். 22, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் போட்டியிடுவது தொடா்பாக முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் அந்தக் கூட்டணியின் தலைவா் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில், புதுச்சேரி சாரம் தனியாா் சொகுசு உணவு விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், கட்சியின் மாநிலச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், எம்எல்ஏ-க்கள் டி.ஆறுமுகம், பி.ரமேஷ், தட்சிணாமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் சபாபதி ஆகியோரும், பாஜக தரப்பில் அந்தச் கட்சியின் தோ்தல் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயமும், அதிமுக சாா்பில் தமிழக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, எம்.சி.சம்பத், முன்னாள் எம்.பி. செம்மலை, புதுவை மாநில அதிமுக செயலா்கள் ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகா், காரைக்கால் மாவட்ட செயலா் ஓமலிங்கமும் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்கி பகல் 11.30 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வா் என்.ரங்கசாமி, ‘உள்ளாட்சித் தோ்தல் குறித்து தே.ஜ.கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஆலோசனை நடத்தினோம்’ என்றாா்.

பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா கூறுகையில், ‘புதுவை உள்ளாட்சித் தோ்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்தக் கட்ட பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்படும்’ என்றாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தை சிறப்பாக நடைபெற்றது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com