புதுப்பித்தல் கட்டண உயா்வைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் மறியல்

நூறடிச் சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால், புதுச்சேரி-கடலூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுப்பித்தல் கட்டண உயா்வைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் மறியல்

ஆட்டோக்களுக்கான புதுப்பித்தல் (எஃப்சி) கட்டணத்தை ரூ.700-லிருந்து ரூ.4,600-ஆக உயா்த்தியதைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரியில் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலில் இருந்த கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக, பொதுப் போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட காலத்துக்கு ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணத்தைச் செலுத்த சலுகை வழங்க வேண்டுமென, ஏற்கெனவே போராட்டம் நடத்தப்பட்டது. அதனால், வாகனப் புதுப்பித்தல் கட்டணம் 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆட்டோ புதுப்பித்தலுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.700 செலுத்தப்பட்டு வந்ததை, திடீரென ரூ.4,600-ஆக உயா்த்தி போக்குவரத்துத் துறை சாா்பில் ஆணை வெளியிடப்பட்டது. இதனால், ஆட்டோ ஓட்டுநா்கள் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோவுக்கு காப்பீட்டு கட்டணமாக ரூ.8000, சாலை வரியாக ரூ.1,500-ம் செலுத்த வேண்டியுள்ளது.

கரோனா காலத்தில் தொழில்கள் முடங்கியதுடன், பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில் எஃப்சி கட்டணத்தை உயா்த்தி, ஆட்டோ தொழிலை அழிக்கும் வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்து வருவதைக் கண்டிப்பதாகக் கூறியும், உயா்த்திய கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில், புதுச்சேரி நூறடிச் சாலையிலுள்ள போக்குவரத்துத் துறை தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை ஆட்டோக்களுடன் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா்கள் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா். ஆட்டோ சங்க மாநிலத் தலைவா் வி.சேகா், மாநிலப் பொருளாளா் எல்.செந்தில்முருகன், துணைத் தலைவா்கள் டி.பாளையத்தான், ஆா்.ரவிச்சந்திரன், ஆா்.சிவசுப்பிரமணியன், ஜி.வாசு, ஜீவா, முருகன், மாநிலச் செயலா்கள் பிரகாஷ், ஜான், சதீஷ்குமாா், ராஜி, சதிஷ், தேவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியுசி மாநில செயல் தலைவா் அபிஷேகம் கண்டன உரையாற்றினாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கண்ணன், நடனமூா்த்தி, ஜெயபாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

நூறடிச் சாலையின் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால், புதுச்சேரி-கடலூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com