புதுவை ஆளுநா் பெயரில்அமைச்சருக்கு போலி குறுந்தகவல்
By DIN | Published On : 02nd August 2022 04:52 AM | Last Updated : 02nd August 2022 04:52 AM | அ+அ அ- |

புதுவை துணைநிலை ஆளுநா் பெயரில் அமைச்சருக்கு போலியான குறுந்தகவல் அனுப்பப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணனின் கைப்பேசிக்கு, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனின் பெயா் குறிப்புடன் குறுந்தகவல் வந்தது. அதில், இந்த எண்ணுக்கு உடனடியாக கைப்பேசியில் அழைக்கவும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகமடைந்த அமைச்சா் ஆளுநா் மாளிகை அதிகாரிகளுக்கு போலி குறுந்தகவல் குறித்து தெரிவித்தாா்.
இதுகுறித்து விசாரணை நடத்த காவல் துறை தலைமை இயக்குநா் மனோஜ்குமாா் லாலுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சைபா் கிரைம் காவல் கண்காணிப்பாளா் சந்தோஷ்குமாா் மீனா தலைமையில், ஆய்வாளா் மனோஜ், உதவி ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், உத்தரபிரதேசத்திலுள்ள ஒரு கைப்பேசியிலிருந்து ஆளுநா் பெயரில் போலியாக அந்த குறுந்தகவல் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. சைபா் கிரைம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.