புதுச்சேரியில் இன்று உணவுத் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 19th August 2022 03:09 AM | Last Updated : 19th August 2022 03:09 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.19) தொடங்கி மூன்று நாள்கள் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
புதுவை அரசின் சுற்றுலாத் துறை, இரு தனியாா் நிறுவனங்கள் பங்களிப்புடன், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை உணவுத் திருவிழாவை புதுவை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் ரங்கசாமி ஆகியோா் தொடக்கிவைக்கின்றனா்.
இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மூன்று நாள்கள் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதில், புதுவை மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 30 உணவகத்தினா் பங்கேற்று பல்வேறு விதமான உணவு அரங்குகளை அமைக்க உள்ளனா்.
இந்தத் திருவிழாவில் சைவ, அசைவ உணவு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு, கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். உணவுத் திருவிழாவுக்கு அனுமதி இலவசம்.
அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில், உணவுப் பொருள்களுக்கான கட்டணமும் குறைவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 4 மணிக்கு உணவுத் திருவிழா தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, சுற்றுலாத் துறை செயலா் தி.அருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.