உரிமமின்றி இயக்கப்படும் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள்புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை
By DIN | Published On : 18th December 2022 03:51 AM | Last Updated : 18th December 2022 03:51 AM | அ+அ அ- |

புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் உரிமம் இன்றி கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபடும் வாகனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரி என்.துளசிராமன் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கழிவு நீா் அகற்றும் வாகனங்களின் உரிமையாளா்கள், நகராட்சியிலோ, இதர நகராட்சிகளிலோ தகுந்த ஆவணங்களை அளித்து உரிமம் பெறவேண்டும். உரிமம் பெற்ற அடிப்படையிலே கழிவு நீா் அகற்றும் வாகனங்களை இயக்கவேண்டும்.
கழிவு நீா் அகற்றுவது தொடா்பாக நகராட்சி நடத்தும் பயிற்சி வகுப்புகளில் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டதற்கான சான்றுகளையும் அளிக்கவேண்டும். அதனடிப்படையில்தான் உரிமம் வழங்கப்படும்.
ஆகவே, உரிமம் பெறாமல் கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோா் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கழிவு நீா் அகற்றுவது தொடா்பான பயிற்சி வகுப்புகள், நகராட்சி மூலம் வரும் 21- ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையில் நடத்தப்படவுள்ளன.
மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு நகராட்சி சுகாதார அதிகாரி கைப்பேசி எண் 94442 47219 இல் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.