முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவையில் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி: பேரவைத் தலைவரிடம் முறையீடு
By DIN | Published On : 07th February 2022 01:26 PM | Last Updated : 07th February 2022 01:26 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வத்திடம் முறையிட்ட பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள்.
புதுவையில் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏக்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாஸ் ஆகிய 3 பேர், தங்கள் தொகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யவில்லை, வாரியத் தலைவர் பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருந்தனர். இதனை அடுத்து அவர்கள் திங்கள்கிழமை திடீரென புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில், பேரவைத்தலைவர் ஆர். செல்வத்தை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், புதுவையின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகிறது. சுயேட்சையாக வெற்றி பெற்ற எங்களது தொகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது.
குறிப்பிட்ட சில எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிகளில் கூட பணிகள் நடந்து வரும் நிலையில் எங்கள் தொகுதியில் நடைபெறாததால், ஆளும் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், எங்கள் தொகுதி மக்கள் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். எங்கள் தொகுதிகளில் அடிப்படைப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அரசுக்கும், அரசுத் துறைகளிலும் எவ்வளவு கோரிக்கை மனுக்களை அளித்து இருக்கிறோம். அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்எல்ஏகளுக்கான நிதியும் வழங்கப்படவில்லை.
எம்எல்ஏ அலுவலகத்தில் வழங்கப்பட்ட கணினி உள்ளிட்ட பொருள்களும் எங்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை. சுயச்சை எம்எல்ஏக்கள் ஆக இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. நாங்கள் வாரியத் தலைவர் பதவியை எதிர்பார்க்கவில்லை. அரசு மூலம் எங்கள் தொகுதியில் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி வருகிறோம். அதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து இருக்கிறோம். அடுத்து ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைப்போம். தொடர்ந்து பாஜகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறோம் என்றனர்.
இதையும் படிக்க- திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் இருவர் ராஜிநாமா
இதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்திடம் கேட்டபோது, அனைத்து தொகுதிகளிலும் படிப்படியாக வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி செய்து வருகிறோம். முப்பத்தி மூன்று எம்எல்ஏக்களுக்கு தலா ஒரு கோடியே 10 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 80 லட்சம் நிதி தருவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். பல தொகுதிகள் பணிகள் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் புதுவையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், இந்த அரசுக்கு இணக்கமாக செயல்பாடாகும் அவர்கள் பழைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போலவே இருக்கின்றனர்.
எனது தொகுதியில் கூட அடிப்படை பிரச்சனைகள் செய்யப்படாமல் உள்ளது. இதற்கு அதிகாரிகள் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எம்எல்ஏக்களின் கோரிக்கை தொடர்பாகவும் முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுயச்சை எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டது.