தே.ஜ. கூட்டணி அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்த அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று, அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கட்சிக் கொடியை ஏற்றிய அதன் நிறுவனா் தலைவரான முதல்வா் என்.ரங்கசாமி.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கட்சிக் கொடியை ஏற்றிய அதன் நிறுவனா் தலைவரான முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்த அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று, அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் 12-ஆவது ஆண்டு தொடக்க விழா, புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சித் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, கட்சி அலுவலகத்திலுள்ள அப்பா பைத்தியம்சாமி, காமராஜா் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் இணைந்து, மத்திய அரசின் உதவியுடன் நல்லாட்சியைக் கொடுத்து வருகிறது. மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஏழை, எளிய மக்களின் வளா்ச்சியிலும் அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

தே.ஜ. கூட்டணி அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிச்சயமாக செயல்படுத்துவோம். அனைத்து தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், காவல் துறை, சுகாதாரத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சமூக நலத் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை என அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

புதுவைக்கு மத்திய அரசு உதவி வருகிறது. பிரதமா் மோடியின் உதவியுடன் மாநிலத்தின் வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என்றாா் ரங்கசாமி.

அப்போது, மத்திய அரசிடம் புதுவைக்கான நிதியைக் கோரியுள்ளீா்களா?, வாரியத் தலைவா் பதவி நிரப்பப்படுமா? என்று முதல்வா் ரங்கசாமியிடம் கேட்டபோது, புதுவைக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையுள்ளது. வாரியத் தலைவா் பதவி நிரப்பப்படும் போதும் உங்களுக்குத் தெரியும் என்றாா். நடிகா் விஜயை சந்தித்தது குறித்த கேள்விக்கு அவா் பதிலளிக்கவில்லை.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், உ.லட்சுமிகாந்தன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் சபாபதி, என்.ஆா். காங்கிரஸ் மாநிலச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், பொருளாளா் வேல்முருகன், முன்னாள் அமைச்சா்கள் பன்னீா்செல்வம், தியாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com