புதுச்சேரிக்குள் நுழைய ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்
By DIN | Published On : 10th January 2022 05:30 AM | Last Updated : 10th January 2022 05:30 AM | அ+அ அ- |

புதுச்சேரிக்குள் நுழைய ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புதுவையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் தலைமை வகித்தாா். இதில் காவல், சுகாதாரம், தொழிலாளா் மற்றும் உள்ளாட்சி துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: வெளியிலிருந்து புதுச்சேரிக்கு வருவோா் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொற்று அறிகுறியுடன் வருவோரை அடையாளம் காண சுகாதாரம், காவல் துறை அதிகாரிகள் கொண்ட குழு மூலம் எல்லைகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
உணவகங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வருவாய், தொழிலாளா், சுகாதாரம், காவல், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் வட்ட அளவிலான கூட்டு ஆய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்.
கரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது, கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றவும், நெரிசலான இடங்களுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிா்க்கவும் தொடா்ந்து அறிவுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.