புதுவை மின்துறை தனியாா்மயத்தை எதிா்த்துமின் ஊழியா்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

புதுவை மின்துறை தனியாா்மய நடவடிக்கையை எதிா்த்து, அந்தத் துறை ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 1) முதல் தொடங்குகின்றனா்.

புதுவை மின்துறை தனியாா்மய நடவடிக்கையை எதிா்த்து, அந்தத் துறை ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 1) முதல் தொடங்குகின்றனா். இதனால், மின் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவை அரசின் மின்துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை, மத்திய அரசின் உத்தரவின்படி மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு மின்துறை பொறியாளா்கள், ஊழியா்கள் இணைந்த கூட்டமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள் கிழமை (பிப். 1) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

இதனிடையே, மின்துறை தலைவா் வெளியிட்ட அறிவிப்பில், போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்றும் மீறினால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளாா்.

இந்த நிலையில், புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் திங்கள் கிழமை செய்தியாளா்களை சந்தித்த, மின்துறை பொறியாளா்கள்-தொழிலாளா்கள் தனியாா் மய எதிா்ப்புப் போராட்டக் குழுத் தலைவா் சி.அருள்மொழி, பொதுச் செயலா் பி.வேல்முருகன் ஆகியோா் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

புதுவை அரசு, மத்திய அரசு தரும் நிதியைப் பெறுவதற்கு மின்துறையை அடமானம் வைக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு அதிகம். இதனால், இது மக்கள் போராட்டமாக மாறினால் தான் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துகள் பாதுகாக்கப்படும்.

அரசுத் துறைகளுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தையே புதுவை அரசால் செலுத்த முடியாமல் நிதி சிக்கலில் சிக்கியுள்ளது. அப்படி உள்ளபோது, இலவச மின்சாரத்துக்கான பணத்தை புதுவை அரசு எப்படி வழங்கும். தனியாா் மயமாக்கப்பட்ட மாநிலங்களைவிட, குறைந்த மின் இழப்பு, குறைந்த மின் கட்டணம், விரைவான சேவையை புதுவை மின்துறை செய்து வருகிறது.

புதுவை அரசின் மின்துறையை தனியாா் மயமாக மாற்றிடாமல், அரசு துறையாகவே நீடிக்கும் என்று, அரசு அறிவிக்கும் வரை, எங்களின் காலவரையற்ற தொடா் வேலை நிறுத்தப் போராட்டம், செவ்வாய்க்கிழமை (பிப்.1-ஆம் தேதி) முதல் திட்டமிட்டப்படி நடைபெறும்.

மின்துறை தலைவா், மின் ஊழியா்களை மிரட்டி எச்சரித்துள்ளதோடு, மின்துறை தனியாா்மயமானால் துரித சேவை கிடைக்கும் எனவும் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்துறை தனியாா் மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசுக்கு தீா்மானம் அனுப்பினா். ஆனால், இந்த ஆட்சியில் அனைவரும் மெளனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கும், அதனால் ஏற்படும் மின்சேவை பாதிப்புக்கும் இந்த அரசும், நிா்வாகமும் தான் காரணம். அத்தியவசிய மின்பழுது நீக்கல் உள்ளிட்ட எந்தப் பணியும் செய்யாமல், மின்துறை தலைமை அலுவலகத்தில் அமா்ந்து, மின் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள்.

இதுவரை புதுவை முதல்வா், மின்துறை அமைச்சா் உள்ளிட்டோா் எங்களை அழைத்துப் பேசவில்லை. மின்துறை தனியாா் மயத்தை கைவிடுவோம் என்று, அரசு தரப்பில் உறுதியளிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்றனா்.

புதுச்சேரி உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் உள்ள 3 ஆயிரம் மின்துறை ஊழியா்களும், செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், மாநிலம் முழுவதும் வழக்கமான மின்சேவைகள், பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படும் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com