புதுவை மின் துறை தனியார்மயம்: அறிவித்தபடி பிப்.1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்

புதுவை மின் துறை தனியார்மயமாவதைக் கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அறிவித்தபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என மின் ஊழியர் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. 
மின்துறை ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள்.
மின்துறை ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள்.

புதுவை மின் துறை தனியார்மயமாவதைக் கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அறிவித்தபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என மின் ஊழியர் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. 

புதுவை மின்துறை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர் மற்றும் ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு மின் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கொள்கை முடிவாக எடுத்துள்ளது. பொது மக்களுக்கும், ஊழியர்களுக்கும் நலன் பயக்கும் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு எதிராக வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது சட்ட விரோதமாகும். அதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் போராட்ட காலத்தில் சம்பளம் வழங்கப்படாது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின் துறை தரப்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுவை மின் துறை தலைமை அலுவலகத்தில் திங்கள் கிழமை திரண்ட மின் துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர், மின்துறை தனியார்மயத்தை கண்டித்து, அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கூறுகையில், புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரமாகவும், மாநில அரசு மௌனமாக இருப்பதால் தனியார்மய நடவடிக்கையில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் அறிவித்தபடி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் புதுச்சேரி உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து மின்துறை ஊழியர்கள், அலுவலர்கள் அனைவரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள். மின்சார பழுது உள்ளிட்ட எந்தவித பணியும் மேற்கொள்ளப்பட மாட்டாது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் மின்துறை  துறை பணிகள் பாதிக்கும் என தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com