புதுச்சேரி பெரிய சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 17th July 2022 11:52 PM | Last Updated : 17th July 2022 11:52 PM | அ+அ அ- |

புதுச்சேரி பெரிய சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு மாநாடு புதுச்சேரி கொசக்கடை வீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன் மாநாட்டை தொடக்கிவைத்தாா். முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளா் வி.எஸ்.அபிஷேகம், நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
மூத்தத் தலைவா் எம்.கே.ராமன் மாநாட்டு கொடியேற்றினாா். நகரச் செயலா் டி.ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுச்சேரி நகராட்சி பெரியசந்தையில் கழிப்பறை, குடிநீா், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கந்துவட்டி கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும். படித்த இளைஞா்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இடங்களை ஏற்படுத்தித் தருவதுடன், பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.