காரைக்கால் அருகே திறக்கப்படாத பள்ளி: சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள்

காரைக்கால் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், காலை 9 மணி வரை பள்ளி திறக்காததால் மாணவ மாணவிகள் சுவர் ஏறி குதிக்கும் விடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் அருகே திறக்கப்படாத பள்ளி: சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள்

புதுச்சேரி: காரைக்கால் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், காலை 9 மணி வரை பள்ளி திறக்காததால் மாணவ மாணவிகள் சுவர் ஏறி குதிக்கும் விடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளி வாயிற் கதவு  காலை 8.30 மணிக்கு திறந்து மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

ஆனால் ஒரு சில அரசு பள்ளிகள், கல்வித்துறை உத்தரவுப்படி உரிய நேரத்தில் திறக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்தநிலையில் காரைக்காலை அடுத்த மேலகாசாக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், காலை 9 மணி வரை பள்ளிக்கூட கதவு திறக்கப்படவில்லை. 

தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், காவலாளிகள் யாரும் அங்கு வரவில்லை. இந்தநிலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் நீண்டநேரமாக காத்திருந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். ஒரு வேளை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்தது. அப்போது, சில மாணவர்கள் பள்ளி சுற்று சுவரில் ஏறி உள்ளே குதித்து வகுப்பறைக்கு செல்ல தொடங்கினர். 

சில மாணவர்கள் சுற்று சுவரில் ஏறி நின்று கொண்டு, சக மாணவர்களை சுவர் ஏறி குதிக்க உதவி செய்தனர். மாணவிகள் சிலரும் பள்ளி நுழைவாயில் இரும்புக் கதவு மீது ஏறிக்குதிக்க உதவி செய்தனர்.

பள்ளிக்குள் மாணவ, மாணவிகள் சுவர் ஏறி குதிக்கும் இந்த காட்சி உடனே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன் பிறகே விவரம் அறிந்து தலைமை ஆசிரியர் பள்ளிக்கு சென்றதாகவும், காலை 9.20 மணிக்கு பள்ளி வாயிற்கதவு திறக்கப்பட்டு சாதரண நிலை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் சுவர் ஏறி குதிக்கும் விடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி மீது கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com